பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை335

பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நானான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையிற்றொகுத்ததன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும் அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை.

சூத்திரம் : 13 
 புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே யொன்றென மொமிப.

கருத்து : மேல் அகத்திணைகளுக்குப் பொதுவாவன நாலெட்டுங்கூறி, அடுத்து அகத்துள்ளும் களவிற் சிறந்து பயிலும் மெய்ப்பாடுகள் உணர்த்தத் தொடங்கி, அவற்றுள் தலைப்படும் அன்பர் உளத்தெழுங் காதல் முதற்குறிகளை இச்சூத்திரம் கூறுகிறது.

பொருள் : புகுமுகம் புரிதல் = தலைக் காட்சியில் தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதல்; பொறிநுதல் வியர்த்தல் = காதலால் நோக்கெதிர்ந்த தலைவி தனக்கியல்பாய அச்சமும் நாணும் அலைக்க அவள் நெற்றியின் பொறிவியர் பொடித்தல்; நகுநய மறைத்தல் = தலைவன் காதற்குறி கண்ட மகிழ்வால் முகிழ்க்குந் தன் முறுவலைப் பிறரறியாது தலைவியடக்குதல்; சிதைவு பிறர்க்கின்மையொடு = தன்னுள் நிறையழிவைப் புறத்துப் புலனாகாது மறைக்கும் தலைவி திறத்தொடு கூட்டி; தகுமுறை நான்கே ஒன்றென மொழிப = பொருந்த வரிசையில் எழும் இந்நான்கும் காதலின் முதற்கூறாகுமென்று கூறுவர் புலவர்.

குறிப்பு : இதில் கூறிய நான்கும் தலைக் கூட்டத்திலன்புறுவார்மாட்டு ஒன்றினொன்று இன்றியமையாத் தொடர்பொடு பொருந்தத்தோன்றி, அவரகத்து விளையுங்காதலின் முதற்குறியாய்ப் புறத்துப் புலப்படுதலின், இவை “தகுமுறை நான்கே ஒன்றெனமொழிப” என ஒருபடித்தாத் தொகுத்துக் கூறப்பட்டன. பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையுங் காதலை ஒளியானாக, ‘அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய தன்மையால் தலைமகள் தன் சுரக்குங் காதலைக் கரக்குமாதலின்’, இம்மெய்ப்பாடுகள் பெரிதும் அவள்மாட்டே காணப்பெறும்.