பக்கம் எண் :

336நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இனி, “புகுமுகம்” என்பதை ‘முன்றில்’, ‘தொழுதெழும்’, ‘வணங்கி வீழ்ந்தான்’ என்பனபோலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும். தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதலை, “நோக்கினாள், நோக்கெதிர் நோக்குதல்” (குறள். 1082); “கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்” (குறள். 102); என வருவனவற்றால் அறிக.

நோக்கெதிர்ந்து தலைவன் காதற் குறிகண்டு மகிழுந்தலைவிக்கு உள்ளுணர்வு பொங்கப் பொள்ளெனப் புறம் வியர்த்தல் இயல்பாதலின், மறையா அவள் சிறு நுதலில் குறுவேர்வை தோன்றும். இதற்குச் செய்யுள்:

(1)  “பெரும்புகழுக்குற்ற நின் பிறைநுதல் பொறிவியர்” (அகம். 136) எனும் அகப்பாட்டடி காண்க.

(2)  யாழ்ப்போரில் சீவகனை முதலில் எதிர்ந்த தத்தைக்குக் காதற்பெருக்கால் “காமல் நுதல்வியர்ப்ப” எனத் திருத்தக்க தேவர் கூறும் குறிப்பும் இம்மெய்ப்பாடேயாகும்.

(3) “யானதற் காண்டொறும் தான்பெரிது மகிழாள்,
வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி
மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த
நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை
நீயறிந் திலையால் நெஞ்சே
யானறிந் தேன்அது வாயா குதலே”
 (இலக்கணவிளக்க மேற்கோள்)

இப்பழைய பாட்டில், இச்சூத்திரம் சுட்டும் கடவுட் காதலின் முதற்குறி நான்கும் முறைய் வருதல் கருதற்குரித்து.

நகுநய மறைத்தலென்பது, முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன்முறுவலை, “பிணையேர் மடநோக்கும் நாணுமுடை” ளாதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், “நாணினளிறைஞ்சி, மிகை வெளிப்படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை” என வருதல் காண்க. இன்னும், “யானோக்கப் பசையினள் பையநகும்” (குறள். 1098) எனவும், “கரப்பினுங் கையிகந்தொல்லா