பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை339

இறுக்குதலென்பதே பொருந்திய பொருளாகும்; அவ்வாறன்றி ஆடையைத் தலைவனெதிரில் தலைவி தானே அழித்துடுத்தல் பெண்ணீர்மையன்றாதலின் அது பொருளன்மை தேற்றம்.

“விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன்
 கண்ணின் நோக்கிய தல்லது தண்ணென
 உரைத்தலு மில்லை மாதோ, அவனே
 வரைப்பாற் கடவுளு மல்லன், அதற்கே
 ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ
 நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத்
 துகிலும் பன்முறை நெடிது நிமிர்ந்தனவே,
 நீயறி குவையதன் முதலே,
 யாதோ தோழி அதுகூறுமா றெமக்கே. ”

எனும் இலக்கணவிளக்க மேற்கோள் பழம்பாட்டில் இச்சூத்திரம் சுட்டும் மெய்ப்பாடு நான்கும் ஒருங்கே நிகழ்ந்தமை தலைவியே கூறுதல் காண்க.

இவை, “சிதைவு பிறர்க்கின்றி”ப் புறங்காத்து அகத்தழியுந் தலைமகள் “மறையிறந்து மன்றுபடும்” தன் நிறையழிகாதலை மறைக்கு முயற்சியில் அவள் காதலுணர்வொடு புணரும் குறிகளாம். காதற்கரப்பும், நிறையழிகாதல் மறைப்பினும் அமையாது புறம்பொசியும் சிறப்பும் பெண்ணியலாதலின், அவ்வியல் குறிக்கும் இவ்வுணர்வுகள் ஊழின் நான்கேயெனத் தொகுத்து இரண்டாங்காதற்கூறாய் உரைக்கப்பட்டன. (ஊழ் = இயல்பு, முறை). இவ்விடத்தில் இளம்பூரணர் ‘கெழீஅய நான்கே’ எனப்பாடங் கொள்வர். அதுவும் இக்குறிப்பினதாதல் காண்க.

இதில், ‘ஓடு’ எண்ணிடைச்சொல், ஏகாரம் இசை நிறை. ‘மொழிப’ எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது.

சூத்திரம் : 15 
 அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்,
இல்வலி யுறுத்தல், இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.