| 340 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கருத்து : இது ஊன்றி வளர்காதலின் மூன்றாங் கூறுபாடுணர்த்துகிறது. பொருள் : அல்குல் தைவரல் முதல் கூறிய நான்கும் களவுக்காதலின் மூன்றாங் கூறாகுமென்பர் புலவர். குறிப்பு : அல்குல் = இருப்புறுப்பு (ஆசனம்). இனி, இதை‘அவையல்கிளவி’யாகக் கொண்டு கூறும் உரை பொருந்தாது. ‘கலையின் மேலணி மேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது’ இருப்பிடம் ஆவதன்றி இடர்க்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம். “திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவி” எனக் கூலூர்கிழாரும், “தழையணி யல்குல் மகளிர்” என அம்மூவனாரும், “தித்தி பறந்த பைத்தகல் அல்குற் றிருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும்” என அஞ்சிலாந்தையும் பிறரும் கூறுவர். இவ்வாறு பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழைகளும், கலையின்மேலணி தழையுடை வகைகளும் அசைந்தாடும் உறுப்பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல் அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும், அல்குல் அவையல்கிளவி யாகாமையும், இருப்புறுப்பையே சுட்டுதலும், தெளிவாகும். இனி, தைவரல் = தடவுதலாம். ‘உடைபெயர்த் துடுத்திய’ பின், குலையாது திருத்திய காலை முன்நிலை படிய இடைக்கீழ் அவ்வுடைதொடும் தடம்விரி இருப்புறுப்பைத் தடவுதல் இயல்பு. அவ்வியல்பு இங்கு ‘அல்குல் தைவரல்’ எனக் குறிக்கப்பட்டது. இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக்குறிப்பால் அறிக. எனினும் அல்குலை அவையல் கிளவியாக்கி, அவிழ்த்து உடை நெகிழ்த்தவள் தன் அற்றம் மறைப்பதே ‘அல்குல்’ தைவரல்’ |