பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை341

என்பர் பேராசிரியர். கற்பிறவாக குலமகள் மணவாத் தலைவன்முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள். குலையுங்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில் தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின், அற்றம் மறைப்பதும் அதற்கல்குல் தைவரலும் அவனெதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள், அதனால் அஃதுரையன்மை அறிக.

இனி, (களையா வளைபோன்ற) ஊழணி திருத்தியும், உடை திருத்தியுங் கொண்டபின், விரும்பப் புனைந்த வேறுகலன் திருத்தலும் காதற் காட்சியில் புகுமுகம் புரியும் பெண்டிர்க்கு இயல்பாகலின், அணிந்தவை திருத்தல் இங்குக் கூறப்பட்டது. அணிந்தவை = ஊழணியல்லாப் பிறகலன்களைக் குறிக்கும்.

இல்வலியுறுத்தலாவது, தனக்கியல்பில்லாத வன்மையைத் தோற்றுவித்தல். தலைவி, தளருந்தன் உளநிலையைத் தலைவனும் பிறரும் அறியாவாறு உரனுடைமை படைத்துக் காட்டுதல். பெருகுங் காதலால் பசைஇ, கண்களவு கொள்ளும் தலைவி தலைவனை “ஏதிலார் போலப் பொது நோக்குத”லோடு, “செற்றார்போல் நோக்கு”வதும், “நிறையழியுந் தலைவி தனக்கில் வலியுறுத்தும்”பெண்ணியல்பாதலைக் குறிப்பறியுந் தலைவன் கூற்றால் குறளடிகள் விளக்குதல் காண்க.

இருகையுமெடுத்தல், தன்மெய் தொட்டுப் பயிலும் தலைவன் தழுவக் குழைபவளுக்கு, முன் தான் கரந்த காதல் கைம்மிக, “உடல் சிந்தைவச” மாவதால், அவள் கருதாமலே கைகள் தாமே அவனைத் தழுவ எழுவதியல்பாகும். இஃதவள் புணர்ச்சி மறாமை உணர்த்தும் குறிப்பாகும். “ஓதியும் நுதலும்” எனும் (சூ. 582) இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில், “மெலிந்திலளாகி வலிந்து பொய்த்தொடுங்கவும், யாமெடுத்தனைத் தொறும் தாமியைந் தெழுதலின்” என வருவது இம்மெய்ப்பாடாகும்.

இதில் ஒடு எண் குறிக்கும். ஏகாரம் இசைநிறை. மொழிப எனும் வினை ‘புலவர்’ எனும் அவாய்நிலை எழுவாய் கொண்டு முடிந்தது.