| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 343 |
(2) இனி, மடம் தப உரைத்தலாவது, பேதைமையொழியப் பேசுதல். முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் கரவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழியத் தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல். (மடம் = கள்ளமற்ற பிள்ளைத்தன்மை; தபுதல் = கெடுதல், நீங்குதல்) அவ் வறிமடநிலையிற் றேர்ந்துரையாடலே மடம்தபஉரைத்தலெனக் குறிக்கப்பட்டது. பாராட்டெடுத்தல், மடம்தப உரைத்தல் முதலிய பலவாற்றானும் மறைத்த கூட்டம் புறத்துப் பொசிய, அயிர்த்தயலார் தூற்றுதற்காளாதலும் அவர் பரிவற்ற பழிச்சொற் கேட்டு நாணுதலும் தலைவிக்குநேரும். அம்பலும் அலரும் கூறும் வம்பர் யாரும் தலைவனறியப் பேசத் துணியார். ஒருவாறு பேசினும், உரனுடைமையினால் அவன் பொருட்படுத்தானாதலின், அவர் கூற்றை அஞ்சுவது தலைவிக்கே பெரிதும் இயல்பாம். (3) “ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்” என்பது, தலைவி தன் களவொழுக்கை ஐயுற்றயலார் தூற்றும் பழிக்கு வெள்குதல். “யானே யீண்டை யேனே; என்னலனே ஆனா நோயொடு கான லஃதே; துறைவன் தம்மூ ரானே; மறைஅல ராகி மன்றத் தஃதே”(குறுந். 97) இவ் வெண்பூதியார் குறும்பாட்டில் தலைவி அலர்நாணுதல் கூறப்படுதலறிக. “அலர்யாங் கொழிவ?தோழி” எனும் சேந்தன்கீரன் குறும்பாட்டுமதுவே. (4) இனி, “கொடுப்பவை கோட” லாவது, தலைவன் அனுப்பும் தழையும் கண்ணியும் போன்ற காதற்கையுறையைத் தலைவி மாறாதேற்றணிந்து மகிழ்தல். முன், அலரஞ்சித் தலைவன் தருவன விலக்கிய தலைவி, அச்சமும் நாணும் அலராலழிய, அவன் தழையொடு கண்ணிதருவனகொண்டு பெருமகிழுறுவது பெண்ணியல்பாகும். “மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவிச் |