பக்கம் எண் :

344நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

செயலை முழுமுத லொழிய, அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே”

(குறுந். 214)

இதில், தலைவன் உதவிய கையுறைத் தழையைத் தலைவி ஏற்றணிந்துவர, அவள்பொருட்டு அவன் தழைகொய்த அசோகுபட்டதெனப்படுதலால், ‘தலைவன் கொடுப்பதும் தலைவி கோடலும்’ கூறப்படுதலறிக. ‘நல்லாறெனினும் கொளல்தீ’ தாதலின் தானொன்று வேண்டாத் தலைவி, பொருட் பொருட்டன்றி, அன்புக்குறியாய்த் தலைவன் தருவன அவன் பொருட்டேற்பாள் என்பது குறிக்க இங்கு அவள் கொடுப்பன கோடலும் கூறப்பட்டது.

தலைவன் உதவுங் காதற் கையுறைகளை அவன் ஈவன தருவன என்னாது ‘கொடுப்பன’ என்றார். தருந்தலைவனுணர்வில் பெறுந்தலைவி யுயர்ந்தவளென்று எண்ணுவதியல்பாதலின். ‘கொடுப்பன கோடல்’ செயலாயினும், கொள்பவளுணர்வை உள்ளவைப்பதால் மற்றவள் உள்ளுணர்வு மூன்றொடும் சேர்த்தெண்ணுதற் குரித்தாமென்னுங்குறிப்பால், “உளப்படத் தொகைஇ” என அதனைப் பிரித்துச் சுட்டிக் காட்டினர். இவை கரப்பு விருப்பைக் கடந்தெழுந் திறத்தவாதலின், எடுத்த நான்கெனக் குறிக்கப்பெற்றன.

ஏகாரம் இசை நிறை. புலவர் எனும் எழுவாய் பொருட்டொடர்பால் அவாய்நிலையாய்க் கொள்ளப்பட்டது.

சூத்திரம் : 17 
 தெரிந்துடம் படுதல், திளைப்புவினை மறுத்தல்,
கரந்திடத் தொழிதல், கண்டவழி யுவத்தலொடு
பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.

கருத்து : இது காதலின் ஐந்தாங் கூறாவனவற்றை உணர்த்துகிறது.

பொருள் : தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாங் காதற் கூறாமென்பர் புலவர்.