| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 345 |
குறிப்பு : (1) முற்படும் அலரால் இற்செறிவுறினும் தமர்மணமறுப்பினும் தனிமை ஆற்றாத் தலைமகள் தலைவனுடன் போக்குக்கு ஒருப்படவும், அன்றேல் தோழியால் அறத்தொடு நிற்க ஒருப்படவும் நேர்வள். இது ‘தெரிந்துடம்படுத’ லாகும். ஆய்ந்து புணர்ச்சிக் குடம்படுதல் இதன் பொருள் என்பர் இளம்பூரணர்; முன் இருகையும் எடுத்தாங்கே கூட்டவுடன்பாடு குறித்தமையால், ஈண்டது மீண்டுங் கூறவேண்டாதாகும். (2) இனி, ஆற்றாத் தனிமையிலழியும் தலைமகள் தனிமைதாங்கா உளத்தளாதலின், உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகித் திளைப்பு வினைகளை வெறுப்ப தியல்பாம். அதனால் அந்நிலை குறிக்கப்பெற்றது. “பாலும் உண்ணாள்” எனும் கயமனார் குறும்பாட்டில், “பந்துடன் மேவாள், விளையாட்டாயமொடு அயர்வோள்” என, அன்புற்றழிபவள் முன்பு திளைத்தவற்றை வெறுக்குங் குறிப்பு விளக்கப்படுதல் காண்க. (3) இனி, கரந்திடத் தொழிதலாவது, சுரந்தெழு காதலைக் கரந்தழிதலைவி தனிமையில் வினையெலாம் தவிர்தலைச் சுட்டும். “யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே” (குறுந். 290) “யாவது மறிகிலர் கழறு வோரே; தாயின் முட்டை போல வுட்கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தோ யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே” (குறுந். 152) எனவரும் செய்யுளடிகளில் கரந்திடத் தொழிதல் கண்டு தெளிக. இனித் தலைவன் தற்காணவும் தான் அவற்காணவும் விரும்புவதே தண்டாக்காதற் பெண்டிரியல்பாதலின், அவ்வியல்புக்கு மாறாகவும் ‘ஒழிதற்’ சொற்பொருட் கொவ்வாதாகவு மிதற்குப் பிறர் கூறுமுரை பொருந்தாமை தெரிந்து விலக்குக. |