| 346 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
(4) இனி, இவ்வாறு தனிப்படரால் மெலிபவள் தான் முயலாது தலைவனைக்காண நேரின் மகிழ்வாள். அதனால் ‘கண்டவழி யுவத்தல்’ இங்குக் கூறப்பட்டது. இதிற் கூறியநான்கும் தலைமகளின் கடக்கொணாக்காதலின் அறிகுறியாய் அமைதலின், இவை பொருந்திய நான்கெனக் குறிக்கப் பெற்றன. ‘ஒடு’, பிரிந்து சென்று முன்னைய ஒவ்வொன்றோடும் ஒன்றும் எண்ணிடைச்சொல். ஏகாரம் இசைநிறை. முன்னதிற் போலவே ‘மொழிப’ எனும் வினைக்குப் பொருந்த அவாய்நிலையாற் புலவர் எனும் எழுவாய் கொள்ளப்பட்டது. | சூத்திரம் : 18 | | | | புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே ஆறென மொழிப. |
கருத்து : இது மாறாக்காதலின் ஆறாங்கூறுணர்த்துகிறது. பொருள் : புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறாமெனக் கூறுவர் புலவர். குறிப்பு : உடன்போக்கும் மணமும் பெறாமல் இற்செறிப்புற்ற கற்புடைத் தலைமகள் வளர்ந்தெழு காதலாற்றளர்ந்தழி நெஞ்சொடு தனிமைதாங்காத்துனியால் வருந்துவள். அந்நிலையிலவள் தன் எண்ணம் அறியாமல் வண்ணமகளிர் பண்ணுங்கோலம் காதலன் காண உதவாமையினால் ஏதமென முனைந்தும், அதனைக்கடியவும் களையவு முடியாமையினால் இனைந்தும் அழிவாள். அந்நிலை இங்குப் ‘புறஞ்செயச் சிதைதல்’ எனக் கூறப்பட்டது. இனி, களவொழுக்கத்தில் ஆற்றாமையினால் அழியுந் தலைவி தன் விருப்பம்பெறவும் தான் வெறுப்பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத்தனிமையினால் ஏங்கும் நிலை ‘புலம்பித் தோன்றல்’ எனப்பட்டது. “புலம்பு தனிமைத்தே” என்பது தொல்காப்பிய ருரியியற் சூத்திரம். வருந்துமவளைப் பரிந்து சுற்றம் துனிமுதல் வினவ, அதற்கு அவள் சொல்வதறியாமல் குழம்புமுணர்வாற் குழறுநிலையைக் “கலங்கி மொழிதல்” எனக்கூறினர் தொல்காப்பியர். |