பக்கம் எண் :

348நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மெய்ப்பாடுகளும் அவ்வாறோடுங்கூடி; மன்னியவினைய நிமித்தம் என்ப = அவையெல்லாம் நிலைத்த காதல் நிமித்தம் எனக் கூறுவர் புலவர்.

குறிப்பு : இங்குக் கூறப்பட்டவும் அவற்றொடு பொருந்தக் குறிக்கப் பட்டவுமாம் உணர்வெல்லாம் நிலைத்த காதற் கூட்டத்திற்கு நிமித்தமாதலால், அவற்றின் பொதுவியல்பு நேரே பொருளாகாவிடினும் பொருளொடு பொருந்தி அக்கூட்டவிருப்பின் முதலும் முடிவுமாய்த் தோன்றுமாதலின், அவை அனைத்தும் கூட்டத்தினைக் குறிக்கும் நிமித்தம் எனப்பெறும். விளைபயன் ஒன்றன் அறிகுறி, விதைமுதல், விளைபயன், தோற்றுவாய்களை அதன் நிமித்தமென்பது முறையொடுமரபாம். ஆதலின், வீயாக்காதலை ஓயாதுணர்த்துமிவை புணர்வொடு பொருந்தும் நிமித்தம் எனப்பட்டன. இதனால் இவற்றின் தன்மை கூறிற்றாம். மேலுரைத்த இருபத்துநான்கே புணர்வின் நிமித்தமென நினையாது, அன்னபிறவுள்ளனவும் தள்ளாது கொண்டமைகவெனக் கூறுதலால் புறனடையுமாயிற்று.

களவொழுக்கம், கந்தருவம்போல நேர்ந்தவழிப் புணர்ந்து தீர்ந்தவழி மறக்கும் திறத்ததன்றாம்; இருவயினொத்துப் பிரியாது கூடிவாழ்தல் அன்றேல் தரியாது இறந்து முடிதல்எனும் துணிவுடையார் இருபாலவரும் ஒருவரை ஒருவர் இன்றியமையாக் காதலுடையார்க்கே உரியதாகலின், அவர் காதலொழுக்கம் ‘மன்னிய வினை’ எனப்பட்டது. மன்னுதல் = நிலையுதற் பொருட்டாதல், “மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை” எனுங் குறளாலும், “மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்” எனவும், “மன்னுதல் வேண்டின் இசைநடுக” எனவும் வருஞ் செய்யுளடிகளாலு மறிக. நிலையாக் காமப் பொய்யொழுக்கை விலக்கி, என்றுங்குன்றா திருவயினொத்த நிலைத்தகாதற் றிணைக்கே இம்மெய்ப்பாடுகளுரிய என்பதை விளக்க, இவை “மன்னியவினைய நிமித்தம்” எனச் சுட்டப்பட்ட செவ்வி அறிந்து பாராட்டற் பாற்று.

சூத்திரம் : 20 
 வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே.

கருத்து : இது மேலனவற்றிற்கோர் புறநடை. கையிகந்த காதல் நலிய ஆற்றாது மெலிபவர்பால் அன்பினைந்திணை