பக்கம் எண் :

350நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

குறிப்பு : ஈற்றேகாரம் அசை. ‘உம்மை’ எதிரது தழீஇய எச்சம். இஃது அடுத்த சூத்திரத்தின் முதலில் வைத்து எண்ணத்தக்கது. முன் ‘ஆங்கவை யொருபாலாக’ எனுஞ்சூத்திரம் சுட்டுவன அதற்குமுன் கூறிய வாராவிடத்து நிகழ்தற்குரிய எனுங் குறிப்புத் தோன்ற, அச்சூத்திர இறுதியில் ‘அவையுமுளவே அயைலங்கடையே’ எனக் கூட்டியுரைத்த குறிப்பும் இங்குக் கருதற்பாற்று. ஆண்டு, ‘இவையும் உளவே’ என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும், ‘அவையும் உளவே’ என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழைய பாடமாகும். அதுவே போல் இதிலும் அக்குறிப்புணர்ந்த இந்நூலார் ‘அவையும் உள’ எனவே கூறுவதை நோக்க, முன்னதிற் போலவே இதிலும் புதிய பிற மெய்ப்பாடுகள் குறிக்குங்கால், அவை முற்கூறிய நேராவிடத்தே தோன்றுமெனச் சுட்டுதற்குரிய வாய்பாடே ‘அவையுமுளவே அவையலங்கடையே’ எனும் தொடர் என்பது தேற்றமாகும். ஆகவே, பின் கூறும் புதிய மெய்ப்பாடுகள் முன் குறித்தவற்றோடு விரவாமல் அவையல்லாவிடத்தே தோன்றற்குரிய எனத் தெளிப்பதே ஈண்டு இந்நூலார் குறிக்கோள். அக்குறிக்கோள் தெளிக்கும் பொருள் முடியாது இதனைத் தனிச் சூத்திரமாகத் துணித்தெண்ணுவதினும், கீழ்க்கூறும் மெய்ப்பாடுகளுக்கு மேற்குறித்தவற்றின் இயைபு தோன்ற அவற்றைக் கூறும் அடுத்த சூத்திரத்தோடு இதை இணைத்தியைத்து ஒரு சூத்திரமாகக் கொள்ளுவதே அப்பொருள் நோக்கொடு சொற்போக்குக்கும் பொருத்தமாகும்.

இனி, இதனை மேலனவற்றிற்கெல்லாம் புறநடையாக்கி, “மேற்சொல்லப்பட்ட ‘புகுமுகம் புரிதல்’ முதலாயின உள நடுவணைந்திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண்” எனவும், ‘இதன் பின்கூறுபவை களவுங் கற்புமாகிய ஐந்திணைக்கும் உரிய’ எனவும், இளம்பூரணர் பொருள் கூறுவர். “இச்சூத்திரத்தின் முற்கூறிய ‘அவை’ என்பன ’புகுமுகம் புரிதல்’ முதலாயின. பிற்கூறிய ‘அவை’ என்பன களவுங்கற்பும்” எனக் குறிப்புரையுங் கூறிவைத்தார். இது, ‘புகுமுகம் புரிதல்’ முதலியவற்றிற்கு இவர் கூறிய பொருட்குறிப்பொடு முற்றும் முரணுவதாகும். ‘வேட்கையொருதலை’ என்னும் களவியற்சூத்திரங்கூறும் ஐந்திணை அன்புநிலைகளுள் முதல் ஆறுநிலைகளுக்குரிய மெய்ப்பாடுகளையே ‘புகுமுகம்புரிதல்’ முதல் ‘புறஞ்செயச் சிதைதல்’ ஈறாக வரும் சூத்திரம் ஆறும் முறையே விளக்குவதாக அச்சூத்திரக் கீழ்க்குறிப்புகளால் வற்புறுத்தும் இவரே அவ்வுரைக் கோளோடு