| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 351 |
மாறுபட்டு இங்கு வேறுபொருள் கூறுவது ‘மாறுகொளக்கூறுவ’தாகும். அதுவுமின்றி, இங்குச் சூத்திரநிலையும் சொல்லமைதியும் அவ்வுரைக்கு இடந்தராமையும் தேற்றமாகும். | சூத்திரம் : 51 | | | | இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏத மாய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்புநனி சுருங்கல், கண்டுயின் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே யென்றல், ஐயஞ் செய்தல், அவன்றம ருவத்தல், அறனழிந் துரைத்தல், ஆங்குநெஞ் சழிதல், எம்மெய் யாயினு மொப்புமை கோடல், ஒப்புவழி, யுவத்தல், உறுபெயர் கேட்டல், நலத்தக நாடிற் கலக்கமு மதுவே. |
கருத்து : இது முன்கூறியன வாராவிடத்து நேரும் வேறு சில மெய்ப்பாடுகளை உணர்த்துகிறது. பொருள் : இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாக எண்ணப்பட்ட இருபதும் அன்புத்திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனிவிளக்கும் மெய்ப்பாடுகளாகும். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. ‘கலக்கமும்’ என்பதன் உம்மை முன் ஒவ்வொன்றோடும் பிரிந்து சென்று ஒன்றும் எண்ணிடைச்சொல்; அன்றி, எச்சம் எனினும், சிறப்பெனினும் தவறாகாது. இனி, இதில் (1) ‘இன்பத்தை வெறுத்தலாவது’, தனிப்படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினிதாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும். தனித்த காதலர் இவற்றை வெறுத்துப் பழிக்கும் துறையில் வரும் செய்யுட்கள் பலவாதலின், ஈண்டு ஒன்றைக் குறித்தல் சாலும். |