பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை353

“இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்”

(குறுந். 217)

எனும் தங்கால் முடக்கொல்லனார் குறும்பாட்டடியும் இடையூறு படூஉம் ‘ஏதம் ஆய்த’லாகும்.

“. . . . . . . . . . . . . . அன்னோ!
 மறந்தனர் கொல்லோ தாமே? களிறுதன்
 உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
 . . . . . . . . . . . . . . .
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே

(குறுந். 307)

எனும் கடம்பனுர்ச் சாண்டிலியன் குறும்பாட்டடிகள், பிரிந்தார் மறந்தனர்கொல்லென வருந்துதல் குறிக்கும்.

“பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
வருவர்கொல்? வயங்கிழாஅய்! வலிப்பல்யான் கேஎளினி”

(கலி. 11)

எனுங் கலியடியு மதுவேயாம்.

(5)‘பசியட நிற்ற’லாவது, தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்.

“இனியான், உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன்,
 தோணல முண்டு துறக்கப் பட்டோர்
 வேணீ ருண்ட குடையோ ரன்னர்” (கலி. 23)

எனுங் கலியடியும்,

“. . . . . . . . . . நின்மகள்
 பாலு முண்ணாள், பழங்கண் கொண்டு
 நனிபசந் தனள்என வினவுதி”

(அகம். 48)

எனும் அகப்பாட்டடிகளும் ‘பசியடும்’ காதலியல் குறித்தல் காண்க.

(6)  ‘பசலைபாய்தல்’ என்பது கூட்டம் பெறாது ஆற்றாத்தலைவியர் காதல்நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.