பக்கம் எண் :

354நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
 இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை
 திதலை மாமை தேயப்
 பசலை பாயப் பிரிவு தெய்யோ. ”

(ஐங்குறு. 231)

“எனக்கு மாகாது, என்னைக்கு முதவாது,
 பசலை யுணீஇயர் வேண்டும்
 திதலை யல்குலென் மாமைக் கவினே”

(குறுந். 27)

இவை ‘பசலைபாயும்’ காதலியல்பு குறிப்பனவாகும்.

(7)  ‘உண்டியிற் குறைதல்’ ஆவது, உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல். முன் பசியடநிற்றல், தனிப்படர்மெலிவால் பசிப்பிணியுணராத கைகடந்த காதல்நிலை குறிக்கும். இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச் சுட்டும். “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ. வி. ப. 537) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.

(8)  ‘உடம்புநனி சுருங்கல்’ என்பது, உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்

“யாமெங் காதலர்க் காணே மாயிற்
 செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
 கல்பொரு சிறுநுரை போல
 மெல்ல மெல்ல வில்லா குதுமே”

(குறுந். 290)

“ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
 தேய்புரிப் பழங்கயிறு போல
 வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. ”

(நற்றிணை. 284)

இவற்றுள், படரொல்லா துடல்மெலியும் காதலியல்பு வருதல் காண்க.

(9)  ‘கண்துயில் மறுத்தல்’: இது தண்டாக் காதல் கொண்டார் துயிலாமை.