பக்கம் எண் :

356நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

(10)  இனிக் ‘கனவொடு மயங்கல்’ என்பது, நயந்தோர் பிரிவால் அயர்ந்த காதலர், கனவிற்றுணைவரைக் கண்டு களித்து, விழித்தபின் காணாது வெருளுதலாகும்.

“. . . . . . . . . . . . . . அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே”

(குறுந். 30)

என நன்னாகையார் குறும்பாட்டில் தலைவியும்,

“. . . . . . . . . . . . . . யாழ, நின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்”

(அகம். 39)

என மதுரைச் செங்கண்ணனார் அகப்பாட்டில் தலைவனும், ‘கனவொடுமயங்குதல்’ காண்க.

“நனவினால் நல்கா தவரைக் கனவினாற்
 காண்டலின் உண்டென் னுயிர்”

(குறள். 1213)

எனும் குறளும் அது.

(11)   ‘பொய்யாக் கோட’லாவது, காதல்மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்.

“பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
 நண்ணேன் பரத்தநின் மார்பு”

(குறள். 1311)


“வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின்
 மாயம் மருள்வார் அகத்து”

(கலி. 88)

இவற்றுள், தலைவி மெய்திரித்துப் ‘பொய்யாக்கோடல்’ காண்க.

(12)  ‘மெய்யே யென்றல்’ : இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவி யியல்பு.