பக்கம் எண் :

358நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

நினக்குயாம் யாரே மாகுதும் என்று
வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள்”

(கலி. 82)

இதில் தலைவன் புதல்வனை வழிமுறைத் தாய் கண்டு மகிழ்ந்த செவ்வி கூறப்படுதல் காண்க.

(15)  ‘அறனழிந் துரைத்தலா’வது, அறனழிய வெறுப்பதுபோல வெறுத்துக் கூறல்.

“. . . . . . . . . . . பிரிந்தோ ருள்ளா
 தீங்குரல் அகவக் கேட்டும் நீங்கிய
 ஏதி லாளர் இவண்வரிற் ‘போதிற்
 பொம்ம லோதியும் புனையல்,
 எம்முந் தொடாஅல், ’ என்குவெ மன்னே. ”

(குறுந். 191)

“யாரு மில்லைத் தானே கள்வன்,
 தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ”

(குறுந். 25)

“அளித்தஞ்சல் என்றவர் நீப்பிற் றெளித்தசொல்
 தேறியார்க் குண்டோ தவறு”

(குறள். 1154)

விளியுமென் இன்னுயிர், வேறல்லம் என்பார்
அளியின்மை யாற்ற நினைந்து”

(குறள். 1209)

இவையனைத்தும் காதல்மிகையால் தலைவி அறனழிய வெஞ்சொல் விளம்புங் காதலியல் குறிப்பதறிக. இன்னும்,

“நற்றோள் நயந்து பாராட்டி
 எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே”

(ஐங்குறு. 385)

“ஊஉ ரலரெழச் சேரி கல்லென
 ஆனா தலைக்கும் அறனில் அன்னை
 தானே யிருக்கத் தன்மனை”

(குறுந். 262)

என வருவனவும் அறனழிந்துரைத்தலேயாகும். அறனழிவதுபோலக் கூறினும், அக்கூற்றுக்கள் காதன்மையால் எழுதலால், மெய்யாக அறனழிக்கும் நோக்குடையனவாகா.