பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை359

இனி, அறன் அளித்துரைத்தல் எனும் பாடம் சிறவாது. அப்பாடத்திற்கு, அறத்தை அருளொடு கூறல் என்பது பொருளாகும். ஈண்டது பொருந்தாமை வெளிப்படை.

(16)  ‘ஆங்குநெஞ் சழிதலா’வது, சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்.

“. . . . . . . . . என்னெஞ்சம்
 அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை
 ஒழிய விடாதீமோ என்று”

(கலி. 143)


“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
 இன்னுயிர் கழியினும் உரையல், அவர்நமக்
 கன்னையு மத்தனு மல்லரோ?”

(குறுந். 93)

என்பன இம்மெய்ப்பாடு குறிக்கும். அறனளித்துரைத்தாள், பின் அதற்கு நெஞ்சழிதல் வேண்டாளாதலாலும் அப்பாடம் பொருந்தாமை யறிக.

(17)  ‘எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல்’: இது காணும் பொருள் எதுவும் தலைவன் வடிவு வண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.

“இந்திர நீலமொத் திருண்ட குஞ்சியும்
 சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
 சுந்தர மணிவரைத் தோளு மேயல,
 முந்தியென் னுயிரையும் முறுவல் உண்டதே”
“படர்ந்தொளி பரந்துயிர் பருகு மாகமும்
 தடந்தரு தாமரைத் தாளு மேயல,
 கடந்தரு மதங்கலுழ் களிநல் யானைபோல்
 நடந்தது கிடந்ததென் னுள்ள நண்ணியே”

(கம்பர், மிதிலைக்காட்சி செய். 56, 57)

இவற்றில், தலைவன் வடிவு, வண்ணம், நடை முதலியவற்றிற்கேற்ப எப்பொருளானும் ஒப்புக்கோடல் காண்க.

இனி, ஏற்புடைப் பொருள்களைத் தலைவன் தலைவிக்கு ஒப்புக்கோடலும் இத்துறையாகும்.