பக்கம் எண் :

362நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

  காதல் கைம்மிகல், கட்டுரை யின்மையென்
றாயிரு நான்கே அழிவில் கூட்டம்.

கருத்து : மேலெல்லாம் களவொழுக்க மெய்ப்பாடுகள் கூறி, இதிற் கற்புக்குரியன கூறுகிறார்.

பொருள் : முட்டுவயிற்கழறல் = இற்செறிப்பு முதலிய கூட்டத்திற்கு இடையூறு உற்றுழி வரைவு வற்புறுத்தல்; முனிவுமெய்ந் நிறுத்தல் = வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்படு குறிப்பால் வற்புறுத்துணர்த்தல்; அச்சத்தின் அகறல் = அலரும் தலைவன் ஆற்றாறும் அஞ்சி, அவனணுகாது சேட்படுதல்; அவன் புணர்வு மறுத்தல் = வரையாது வந்தொழுகுந் தலைவன் கூட்ட மறுத்தல்; தூதுமுனிவின்மை = ஒழியாது உடனுறையும் அழிவில் கற்புக்கூட்டம் கருதிய தூதினை வெறாமை; அதாவது, வரைவுகருதி அவனுக்குத் தூதுய்க்கவும், அவன் தூது எதிரவும் விரும்புதல்; துஞ்சிச் சேர்தல் = வரையாதொழுகும் தலைவன்வரவு மகிழாது மாழ்கிக்கூடல்; காதல் கைம்மிகல் = புணர்வு பெறாமல் வரைவுநீட்டித்தவழிக் கையிகந்த காதலால் நையுநிலை; கட்டுரையின்மை = காதல்மிகையால் வாய்வாளாமை; என் றாயிரு நான்கே அழிவில் கூட்டம் = எனவரும் எட்டும் வரைந்து பிரியா மனையறவாழ்க்கை விருப்பைக் குறிக்கும் மெய்ப்பாடாகும்.

குறிப்பு : நான்கே என்பதான் ஏகாரம் தேற்றம். ஆயிடை எனல்போலச் செய்யுளாதலின் ஆயிரு என அகரச்சுட்டு நீண்டது. மேலே “நகையே அழுகை” எனும் மூன்றாவது முதற் “செல்வம் புலனே” என்னும் பதினொன்றாம் சூத்திரம் வரையிலும் அகப்புறத் திணைகளிரண்டிற்கும் பொது மெய்ப்பாடுகளை விரித்து, அவற்றின்பின் அகப்பொருளை அகத்திணை களவு கற்பென மூவியலாக வகுத்ததற்கேற்ப அகவொழுக்க நிமித்தமாம் மெய்ப்பாடுகளையும் முத்திறப்படுத்தி, “ஆங்கவை ஒருபாலாக” (சூ. 12) என்பதில் அகப்பகுதிக்குப் பொதுவாய் அமைவனவற்றைத் தொகுத்துக்கூறி, பிறகு “புகுமுகம்புரிதல்” (சூ. 13) என்பது முதல் “இன்பத்தை வெறுத்தல்” (சூ. 22) என்பதுமுடிய அகத்திற் கரவுக் காதலாம் களவினுக்குரியன தெளிக்கப்பட்டன. இனி, மறையாது உடனுறையும் கற்புக்காதற்குரியன கூறத்தொடங்கி, முதலில் உலகறிய இடையறவின்றி உடனுறையின்ப மனையற வாழ்க்கை வேட்கையால் வரைவு வற்புறுத்துந் தலைவிக்குரியன இதிற்