பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை411

காணாமையின், அவர் தம்முள் “விழிமொழியுங் குறிப்புரை” நிகழ்வுறாத் தேவர் சிந்தாமணி வரலாற்றில் கண்டுதெளிக. குறிப்புரை நிகழுமாறும் அதன் வேறுபாடும் மெய்ப்பாட்டியலில் விளக்கப்பெறுதலானறிக.

சூத்திரம் : 7 
 பெருமையும் உரனும் ஆடூஉ மேன.

கருத்து : இதுவரை, களவிற் காதலர் எதிர்ப்பாடும், அவர்தம் ஐயமும் தெளிவும், நாட்டமிரண்டால் குறிப்பறிந்து கண்களாலுரையாடி அறிவுடம்பட்டு, உணர்வொன்றி உள்ளம் புணர்தலுங்கூறி, இனி அவர் களவொழுக்கம் விளக்கக் கருதிய தொல்காப்பியர் அவ்வொழுக்கிற்குரிய அவர்பாற் பண்புரைக்கத் தொடங்கி, இதில், ஆடவரியல்பு குறிக்கின்றார்.

பொருள் : பெருமையும் = பெருந்தகைமையும்; உரனும் = கலங்கா உணர்வும்; ஆடூஉமேன = ஆண்மகனுக்குரியவாம்.

குறிப்பு : சிறுமை வெறுத்தரியபுரியு முள்ள நிறைவு பெருமை எனப்படும்; அசைவிலா அறிவின் துணிவு உரனாகும். இனி, ஈண்டிவ்வியல்பு கூறவே, தலைவி குறிப்பறிந்த தலைமகன், அவளொடு தான் உள்ளுணர்வினொன்றி நின்று மகிழ்நிலையில், அவள் தனிமையையும் காதற் கனிவையும் துணைக்கொண்டு அவன் பெண்பெருமை குன்ற இன்பம் நுகராமல் தன் பெருமையாலே புன்விழைவை வென்று, அவள் குரவர் தரப் பெற்று, வரைந்தெய்தும் வரையும் தம்மிடைக் கரந்துவளர் காதல் பரந் தலர்படாமல், உரந்துணையதாக மறைந்தொழுகுமியல்பும் அமையக் கூறலாயிற்று. எனவே, உள்ளப்புணர்வன்றி வரையுமுன் மெய்யுறு புணர்ச்சி களவுத் திணையில் காதலர்க் கறநெறியன்மை பண்டை நூலோர் கொண்ட மரபு. தொல்காப்பியரும் இயற்கைப் புணர்ச்சிக்குச் சிறப்புக்கூறாக் குறிப்பும் தேறற்குரியது. வரையுமுன் காதலர் புரைபடு கூட்டம், அறமரபறியாப் பிறபின்னூற்களில் வரைவின்றி யாண்டும் பலபட வழங்கும்; தொல்லைச் சான்றோர் நல்ல செய்யுளில் இயற்கை நோக்கியது அருகித் தோன்றும்.