| 414 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
தொடர்புடைய இவ் ஒன்பதும்: களவு என மொழிப = களவுக் காதற் கூறுபாடு எனக் கூறுவர் களவு நூற் புலவர். குறிப்பு : ‘மொழிப’ எனும் வினைக்கு ஏற்ப எழுவாய் பொருட்டொடர்பால் கொண்டு கூறப்பட்டது. இதிற் கூறிய ஒன்பதும், களவுத் திணையில் உயிரும் அறிவும் ஒன்றி உணர்வாற் புணர்ந்த காதலர், ஊர் அலரஞ்சி அறம்பேணித் தாம் கரந்தொழுகும் காதல் கையிகந்து பெருக. ஆற்றா நிலையில் அடையும் ஏமமற்ற காம வேதனைகள். இவை முறையே களவுக் காதலினளவுக் குறியாய் ஒன்றின்மே லொன்றாய்த் தனிமை ஆற்றார் தம்பால் நிகழ்வன. இவற்றா லெழுபவை அன்புத்திணைத் துறைகளாதலின், அத்துறைவகை தொடங்குமுன் ஈண்டிவை சுட்டப்பட்டன. இவற்றைக் களவுத்திணை இலக்கணமென்பது, இவற்றியலறியாக் கூற்றாதல் வெளிப்படை. இனி, இவற்றினிவ்வியலைச் சான்றோர் செய்யுட் சான்றாலறியலாம். 1. வேட்கை : (தலைவன் வேட்கை) “நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே. . . . ” (குறுந். 29: 1-4) தலைவியின் வேட்கை: “யானே ஈண்டை யேனே; என்னலனே ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனோ டாண்டொழிந் தன்றே” (குறுந். 54) 2. ஒருதலை உள்ளல் : (தலைவன் உள்ளல்) “உள்ளிக் காண்பென் போல்வல்; முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே” (குறுந். 286) |