பக்கம் எண் :

422நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சூத்திரம் : 13 
 பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப.

இது இளம்பூரணத்திலுள்ளது. நச்சினார்க்கினியர் இதில் பன்மையை ஒருமையாக்கிப், “பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப” எனப்பாடங்கொண்டு, பொருளும் சிறிது மாற்றிக்கூறினார். இருவருரையும் ஆசிரியர் கருத்தொடு பொருந்துவதாயில்லை எனத் தெரிகிறது. முதலில், பன்னிரண்டாவன இவையெனத் தொல்காப்பியர் யாண்டுக்கூறினார் என்பதை இரண்டு உரைகாரருமே சுட்டிலர். இலக்கணநூலில், ஆசிரியர் தாம் நுதலிய பொருளை இனைத்தெனத் தெளிவியாதிரார். படிக்கும் பலரும் பலவாறு திரியக்கொள்ளவைப்பது இலக்கணநூலில் இழுக்காகும். ஈண்டு இளம்பூரணர் கொண்ட 12ம், நச்சினார்க்கினியர் கூறும் 12ம், தம்முள் வேறுபடுகின்றன. இவருள் இளம்பூரணர் முதலில் உரைகண்டவர். இருவரும் இருவேறு 12 நிமித்தம் வகுத்தெண்ணச் சூத்திரம் இடந்தராது. இருவரில் ஒருவரேனும், இருவருமேனும் தவறாகக் கூறினராதல் வேண்டும். இருவர் கூற்றும் ஆசிரியர் கருத்தாயமைதல் கூடாது.

இனி, யாண்டும் இவ்வீருரைகாரரும் ஆசிரியர் வகுத்து 12 நிமித்தங்கூறிய இடத்தையேனும், ஆசிரியரே சுட்டிய நிமித்தப்பெயர்களையேனும் காட்டவுமில்லை. எனவே, இனி மூன்றாவ தொருவர் முன்னிருவருங் கூறாத புதிதான பன்னிரண்டு நிமித்தங்களையே இச்சூத்திரக் கருத்தாகக் கூறவுங்கூடும். ஆசிரியர் நுதலிய 12 யாவை என முடிவு காண்பதெப்படி?இவ்வாறு ஐயத்திற்கிடனாகச் சூத்திரித்தார் என்பது நூலியல்புக்கும் ஆசிரியர் பெருமைக்கும் பொருந்தாது.

இரண்டாவதாக, களவியற்றொடக்கத்தில் வரும் இச்சூத்திரத்தில் கற்பின்பாற்படுங் கூட்டங்களை ஆசிரியர் கூறினாரென்பது கொள்ளற்பாற்றன்று. இரண்டு உரைகாரருமே எட்டு மணத்தையும் ஈண்டுத் தொல்காப்பியர் கருதி இச்சூத்திரமியற்றியதாகக் கொள்ளுகின்றனர். இது ஆசிரியர் கற்பிலக்கணங்களைப் பின்வேறியலாக்கி இங்குக் களவிலக்கணங் கூற எழுந்த இவ்வியலுக்கும் நூற்போக்குக்கு மியைவதன்று.

இனி, பைசாசம், இராக்கதம், ஆசுரம்போன்ற பல கூட்டங்களும் இடையே பாங்கரை இன்றியமையா நிமித்தமாகக் கொள்ளவேண்டு வனவுமல்ல.