| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 423 |
அதான்று. அவை களவியலில் இலக்கணங் கூறப்பெறக் காரணமுமில்லை. இன்னும், களவின் பகுதியாகிய உடன்போக்கைக் களவின்வேறாய் விதந்தோதி வேறெண்ணலும், கற்பின் பகுதிகளான பல கிழத்தியரையும் பரத்தையரையுங் கூடுங் கூட்டங்களை யெல்லாந் தனிவேறெண்ணிக் கூட்டலும், கற்பை இக் களவியற்பகுதியி லிழுத்தெண்ணலும் பொருத்த மின்றாம். இவ்வாறு பிரித்துக்கூட்டினாலன்றி இளம்பூரணருரையில் நிமித்தம் 12 நிரம்புமாறில்லை. அஃதேபோல், நச்சினார்க்கினியத்தில் களவினைந்திணையை ஐவகையாக்கியதும், அவற்றொடு களவுக்கு ஒப்பான கந்தருவத்தை நீக்கி மற்றை மறையோர்தேயத்து மன்றலெனும் ஏழுங்கூட்டிப் பன்னிரண்டாக்குவதும் பொருந்துவதன்றாம். அன்றியும், எல்லாநிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் எல்லாத்திணையுங் கூட்டமாகா. கூட்டத்திற்கு வேண்டப்படும் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டும் இரங்கல், இருத்தல், பிரிவு என்பவற்றுள் இடம் பெறற்கில்லை. இவைகளை யெண்ணிக் கூட்டிப் பன்னிரண்டாக்கிக் களவுக்கூட்டத்திற்காம் நிமித்தம் இவையெனல் பொருந்தாது. அன்றியும், நச்சினார்க்கினியர் கூட்டத்திற்குரிய பாங்கரெல்லாம் பார்ப்பனப் பாங்கராகக் கொண்டதற்கும் நியமமில்லை. கடைசியாகப், பிரமமுதல் பைசாச மிறுதியாக எண்ணப்படும் எட்டும் ஆரியர் நூலில் மக்களுள் நடக்கக்கூடியனவாகக்கண்ட கூட்டமன்றி, அவையெல்லாம் வதுவை மணமாகா. எனைத்தாயினும் அவற்றைத் தமிழரின் அன்பிற்சிறந்த காமக்கூட்டத்தொடு இணைத்தெண்ணவும், அவற்றிற்காவனவற்றைக் களவுக்கூட்ட நிமித்தங் கூறுமிடத்து ஆசிரியர் கூறக்கருதினரென் றெண்ணவும், பாயிரத்தானும் நூற்போக்கானுந் துணியப்பட்ட ஆசிரியர் நோக்கம் இடந்தராது. ஆகவே, ஈண்டு இவ்வுரைகள் தவறாதல் வெளிப்படை. அதனால் ஆசிரியர் சுட்டிய நிமித்தமாவன பன்னிரண்டும் யாவையென ஆய்ந்து தெரியற்பாற்றாம். அவை யாவையாயினும், ஆசிரியர் நூலிலே கூறப்பட்டவையாகவே இருத்தல் வேண்டும். நுதலிய பொருளிலக்கண முழுவதும் ஒரு சூத்திரத்திலேயே உரைத்துத்தீரவேண்டுமெனும் நியதியில்லை. ஒன்றில் தொகையும் மற்றொரு சூத்திரத்தில் அதன் வகையுங் கூறிப்போதல் ஆசிரியர் முறையென்பதைத் தொல்காப்பியத்திற் |