| 424 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பலவிடத்துங் காணலாம். ஆனால், தாம் நுதலிய தொகையின் வகைவிவரத்தைத் தாமே வகுத்து விளக்காமல், பிறர் மயங்கவும் மாற்றிக்கூறவும் இடம்வைத்து வகையே கூறாதொழிவது ஆசிரியர் நூலில் யாண்டுங் காண்டற்கில்லை. ஆதலால் இங்கு அவர் தொகை பன்னிரண்டெனச்சுட்டிய பாங்கர் நிமித்தங்களின் வகைவிவரமும் இச்சூத்திரத்தை யடுத்தே ஆசிரியர் கூறிவைத்திருப்பர் எனக் கருதுவது தவறாகாது. இந்நினைவோடு துருவிப் பார்த்தால் இதற்கு முன்னதற்கு முன்னைய சூத்திரத்தில் இப்பன்னிரண்டும் வேறு சில நிமித்தங்களுடன் சேரக்கூறப்பட்டிருப்பதைக் காணலாம். களவியலில் இதற்குத் தொடர்புடையதாய்ச் சிறிது முன்னின்ற 11ஆம் சூத்திரம் “மெய்தொட்டுப் பயிறல் . . . . . . . . . . . . . . . . . . . . . மடன்மா கூறு மிடனுமா ருண்டே” என்பதாகும். இதில் இயற்கைக் கூட்டம், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் எனும் “களவிற்கூட்டம் நான்கினும்” சென்று அமையும் நிமித்தங்கள் நிரல்பட விளக்கப்பெறுகின்றன. இதிற் கூறப்பட்ட இருபதனுள் ‘மெய்தொட்டுப் பயிறல்’ முதல் ‘தீராத்தேற்றம்’ வரையெண்ணிய “இருநான்கு கிளவியும்” இயற்கைக்கூட்டம் இடந்தலைப்பாடு என்னும், இவ்விரண்டன் பகுதியவாம். அடுத்த நான்கும் பாங்கனாற்கூடும் கூட்டத்திற்கும், இறுதி எட்டும் பாங்கியிற் கூட்டத்திற்குமாகப் பன்னிரண்டு நிமித்தங்களும் ஆசிரியர் விளக்கியுள்ளார். இதுவே ஆசிரியர்கருத்தும் அவர்கொண்ட முறையும் என்பது. இச்சூத்திரங்கூறும் நிமித்தங்கள் இருபதில் பாங்கர் நிமித்தமாகாதனவற்றை “இருநான்கு கிளவியு”மெனமுதலில் ஆசிரியர் தொகை கூறிப் பிரித்தமையானும், அவைநீக்கி எஞ்சியவற்றையே “பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” எனப் பின் 13ஆம் சூத்திரத்தால் தொகுத்துக் கூறினமையானும், எல்லாவுரைகாரரும் இந்த 11ஆம் சூத்திரத்தின் கீழ்ப் பாங்கன்பாங்கிகளான இருவகைப் பாங்கர் நிமித்தம் இப்பன்னிரண்டாகவே உடன்பட்டுக் கூறுதலானும் தெளிவாகின்று. ஆகவே, பாங்கன் பாங்கிகளாலாய கூட்டத்திற்கான நிமித்தம் பன்னிரண்டும் இச்சூத்திரத்தில் “பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” எனத் தெளிக்கப்பட்டுள்ளன. இவை மற்றைய |