| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 425 |
இயற்கைக் கூட்டம் இடந்தலைப்பாடுகளின் நிமித்தம் எட்டனோடும் இங்குச்சேர்த்துக் கூறப்பட்டு எல்லாம் தலைவன் கூற்று நிகழ்தற்கிடனாகுமென்று பொதுப்படக்கூறியதனால், இதில் ஆசிரியர் பாங்கன் பாங்கியிருவராலாங் கூட்டங்களுக்கு வரும் நிமித்தங்களைப் பிரித்து, முன்னைச் சூத்திரத்திற் கூறிய இருபதனுள் “பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” எனத் தனியே வேறுதொகுத்து இச்சூத்திரத்தில் விளக்கிப் போந்தார். எனவே, இக் களவியல் 13ஆம் சூத்திரத்தில் ஆசிரியர் தொகுத்துக்கூறிய பாங்கர் நிமித்தம் பன்னிரண்டாவன, முன்னைய 11ஆம் சூத்திரத்துப் பிற்பகுதியில் ‘பெற்றவழி மகிழ்ச்சியும்’ என்பது முதல் “தோழி, நீக்கலினாகிய நிலையுநோக்கி, மடன்மாகூறுமிடனுமாருண்டே” என்பதீறாகவகுத்து விளக்கிய பன்னிரண்டுமேயாம் என்பது அங்கை நெல்லிபோற் சங்கையறத் தெளியக்கிடக்கின்றது. ஆசிரியர்க்கு இது கருத்தாமேல், வகைகூறிய முன்னைப் பதினோராஞ் சூத்திரத்தை ஒட்டி இத்தொகைச் சூத்திரத்தை நிறுத்தாமல் இடையே பிறிதொரு சூத்திரம் வரவைத்தது ஏனெனில், கூறுவன், “மெய்தொட்டுப்பயிறல்” என்னுஞ் சூத்திரம், நால்வகைக் களவுக்கூட்டநிமித்தங்களை வகுத்துக்கூறினும், அவையெல்லாம் தலைவன் கூற்று நிகழ்தற் கிடனாமாறு கூறுதலை நுதலிற்று. தலைவன் கூற்று நிகழ்தற்கேதுவாய பிறசிலவும் ஈண்டுத் தொடர்புடைமைகருதிப் “பண்பிற் பெயர்ப்பினும்” எனும் சூத்திரத்தில் அவற்றையும் இதனையடுத்துத் தொகுத்துவைத்தார். அதன்பின் முன்னைய சூத்திரத்தில் தலைவன் கூற்றிற்கிடமாயவற்றையெல்லாம் வகுத்து விளக்கியதனால், அவற்றில் பாங்கர் நிமித்தமாவன பன்னிரண்டே எனத் தெளித்தற்கு இத்தொகைச் சூத்திரங் கூறினர். அன்றியும், பாங்கன் பாங்கிகளினிமித்தங்களான இப்பன்னிரண்டனுள் முன்னைய மூன்றும் கைக்கிளைக்கும், பின் இறுதிய நான்கும் பெருந்திணைக்கும் பொருந்தற்பால எனவும், இடையைந்தும் எஞ்ஞான்றும் ஐந்திணைக் களவுக் கூட்டத்திற்கே யாமெவும், இவற்றிற்கியைவதோர் சிறப்பிலக்கணமு மிங்குத்தாம் கூறுகின்றாராகலின், அதற்குமிப்பாங்கர் நிமித்தம் 12 எனுந்தொகை பிரித்து முன்கூறவேண்டினராசிரியர். இவை பலவும் செவ்வனே சொல்லமைதியும் சூத்திரத்தொடர்புங்கருதி உய்த்துணருங்கால், இச்சூத்திரங்களுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்ட உரை, ஆசிரியர் கருத்தாகாமை தெளிவாகும். |