பக்கம் எண் :

426நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சூத்திரம் : 14-15 
 முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே.

இவற்றுள் முதலதற்குப் பழைய உரைகாரர் இருவரும், மறையோர் தேயத்து மன்றல்களான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எட்டனுள் பிரமமுதல் தெய்வமீறாகவுள்ள நான்கும் பெருந்திணை கொள்ளும் எனவும், இறுதிமூன்றான ஆசுரம், இராக்கதம், பைசாசங்கள் கைக்கிளைக்குறிப்பாமெனவும் பொருள் கூறினார். இது பொருந்தாது.

(1)  முதலில் இவ்வெட்டுக் கூட்டங்களையே ஈண்டுக் கருதுவதான குறிப்பு ஆசிரியர் கூற்றிலில்லை. இரண்டாவதாக, தமிழரின் களவிலக்கணப் பகுதியில் களவுக்கூட்டம் நால்வகை கூறி, அவற்றினிடைத் தலைவன் கூற்று நிகழ்தற்கான நிமித்தங்களை முன் 11ஆம் சூத்திரத்தில் விளக்கிப் பின் 16ஆவது சூத்திரத்தில் தலைவி கூற்றுக் கூறுமாசிரியர் இவற்றினிடையில் தமிழ்நாட்டிற்குச் சம்பந்தமில்லாத வடநூல்களில் வரும் எட்டுக் கூட்டத்தை இழுப்பதற்கு இயைபும் அவசியமுமில்லை. எடுத்தாளும் பொருளுக்கு இன்றியமையாத தொடர்புடைய வல்லாத வடநூற்கூட்ட மெட்டினையுங் குறிக்க விரும்பி யிருப்பின், ஆசிரியர் அதனைவிதந்து கூறி விளக்கி யிருப்பர். அவ்வாறு தம் விருப்பை விளக்காமலும், “முன்னைய மூன்று, ” “பின்னர் நான்கு” என இங்குத்தாம் சுட்டுபவை யெவை? எவற்றனுள் இவற்றைத்தாம் பிரித்துக் கூறியது? என்பவற்றைத் தெளிவாக்காமலும், வாளா முன் மூன்று பின் நான்கு எனுந்தொகையளவில் நிறுத்தி அவற்றின் வகையை விளக்காமல், மயக்கத்திற்கும் வேண்டியார் வேண்டியாங்கு விரித்தற்குக் களனாகவும் ஆசிரியர் தம் அரிய இலக்கணநூலில் இடந்தருவாரல்லர். ஆதலால், ஈண்டு மூன்று நான்கு எனத் தொகுத்தவை ஆசிரியரே வகைவிரித்து விளக்கியுள்ளவற்றைக் குறிப்பனவாகக் கொள்ளுவதே மரபும் முறையுமாகும்.

(2)  இனி, இவ்வாரியநூற் கூட்டமெட்டினையே குறிப்பதாகக் கொள்ளினும், அவற்றுள் முதலி லெண்ணப்பெறும் பிரமம்,