பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை427

பிரசாபத்தியம், ஆரிடம் என்ற மூன்றைக் கைக்கிளையாகவும், பின்னான்கான தெய்வதம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம் என்பவை பெருந்திணையாகவுங் கொள்ளல் வேண்டும். இவைதாம் இவ்வெட்டனுள் முன்மூன்று, பின்னான்கு என வரிசையில் எண்ணற்குரியவாகும். இதனைவிட்டு, இறுதி மூன்று கைக்கிளை முதலில் நான்கு பெருந்திணை என, ஆசிரியரின் விசதவாக்குக்கு விரோதமாக மாற்றிக்கூற நியாயமில்லை. நிரலே இவ்வரிசையில் இவற்றை யமைத்துக் கூறுவதிலேற்படும் சில அசங்கதங்களை விலக்கவேண்டி உரைகாரர் தமது இயையாவுரைக்கு அமைய அமையாவரிசை முறைமாற்றிக் கூறலானார்.

(3)  இனிப், புணர்ந்து முடியு மணமெட்டனுள் எதையும், புணர்ச்சிபெறாததும் பெறுதலொண்ணாததுமான கைக்கிளையாக்குவது, தமிழ் மரபுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் முற்று முரணாகும். கூட்டம் பெறாதவரையே கைக்கிளையாம். கூட்ட மெதுவாயினும், அது ஒன்று அன்பிற் கூட்டமான களவு, அல்லது பெருந்திணையாவதன்றிக் கைக்கிளையாகக் கொள்ளுமாறில்லை. ஆகவே, அவ்வாறு கோடல் ஆசிரியர் கருத்தாகாது.

(4)  இன்னும், முதல் மூன்று, ஈற்று நான்கு என்னாமல் சூத்திரத்தில் வாளா”முன்னைய மூன்று பின்னர் நான்கு” எனவே கூறப்படுவதனால், மூன்றும் நான்கும் ஏழேயாக, எட்டெண்ணுடைய வடநூல் கூறுங்கூட்டங்களை இங்குச்சுட்டித்தீர வேண்டிய நியதியில்லை. இவை யெட்டும் மணமெனக் கருதுதற்குரியவுமல்ல. சிலவே குற்றமற்ற மணமும், வேறு சில வெறுக்கத்தக்க பாவக்கூட்டமுமாகும். வடநூல்களும், இவ்வெட்டினையும் கொள்ளற்குரிய வதுவை முறைகளாகக் கூறவுமில்லை; மக்களுள் நிகழக்கூடிய கூட்டங்களாக மட்டும் சுட்டுகின்றன. எனவே, சூத்திரத்திற் கவசியமான ஏழெண் கொள்ளும் எழுபிறப்பு. எழுதீவு, ஏழுலகமாதியவற்றுள் ஒன்றைக்கூறி இச்சூத்திரத்தொகை எண்ணை யமைத்தல் கூறுவதாகவும், இவற்றையெல்லாம் விலக்கித் தமிழ் மரபாகாத ஆரியநூலிற் காணப்பெறும் எட்டுவகைக்கூட்டங்களை, ஆசிரியர் எனைத்தானும் அக்கருத்தைக் குறியாதிருக்க, இத்தமிழிலக்கணச் சூத்திரம் நுதலிய பொருளாக இங்குக்கொள்ள நியாயமும் அவசியமுமில்லை.