| 430 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஆசிரியர் இச்சூத்திரங்களில் முன்விளக்கிய ஐந்திணையிலக்கணத்தையும் தெளிவான சொற்களையுங் கருதாமல், தாம் கூட்டங்களாக ஐந்தினைக்கூற நினைந்து களவுகற்பு இவற்றினுட்பிரிவுகளில் தமக்குத் தோன்றிய சிலவுமாகச் சேர்த்து, ஐந்து கூட்டம் இச்சூத்திரம் நுதலியதாகவும், முன்சூத்திரம் ஆரியமணமெட்டில் இடைக்கந்தருவமொழிய மற்றைய ஏழு கூட்டங்களையே நுதலியதாகவும் கூறிவைத்தார். இதில் உடன்போக்கு கூட்டச்சார்பன்றிக் கூட்டமாகாமையும், பாங்கியன்றிப் பாங்கனிமித்தமாகாமையும், பைசாச முதலியவற்றிற்கு இருவகைப் பாங்கரும் வேண்டப்படாமையும், எண்வகைக் கூட்டம் தமிழ் மரபில்லாமையும், அவற்றையும் பின் வேறு பகுதியாக இலக்கணங் கூறுங் கற்புப்பகுதிகளையும் இங்குக் களவுப்புணர்ச்சி அதற்குரிய பாங்கர் நிமித்தம் தலைவன் கூற்றுக்களுக்கு இலக்கணங் கூறுமிடத்து வலிந்து இழுத்து இணைப்பதின் அமைவின்மையும், “முதலொடு” என்பதற்குக் கருப்பொருளொடு என்பதன் பொருந்தாமையும், இன்ன பலபிற இயைபின்மைகளும் ஈண்டு உரையாசிரியர் கருதினாரில்லை. இனி, இவ்வாறே இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியரும் பொருந்தாப்பொருள் கூறிப்போந்தார். இனி யாழோர் மேன . . . . ஐந்நிலம் பெறுமே” யெனுமிச் சூத்திரம் சுட்டும் ஐந்நிலமாவன யாவை?பாலையுட்பட “வையம் பாத்திய” ஐந்நிலமென உரைகாரரிருவருங் கொள்ளற்கில்லை. அவர்கள் முன்னைய சூத்திரங்களோடு இதனைச் சேர்த்து இவற்றில் வரும் மூன்றும் நாலும் ஐந்துமான பன்னிரண்டுங் கூட்டமேயெனக் கொண்டதனால், அப்பன்னிரு கூட்டத்திற்கும் பன்னிருநிலங்கூறல் கூடாமையானும், தாம் கொண்ட கூட்டம் பன்னிரண்டுக்கும் ஒப்ப அமைவதானதோர் பொருளே ஈண்டு நிலத்திற்குக் கொள்ளவேண்டுதலானும். நடுவணைந்திணையான களவுக்கே வையம்பாத்திய ஐவகை நிலத்தையும் ஆக்கிவிடில் பிறகூட்டம் ஏழும்பெறுநிலமில்லையாகலானும். பாலைக்கு நிலமின்றிப் பிறநான்கு திணைகளுக்கேயுரியவாக வையத்தை நானிலமெனவே ஆசிரியர் கூறினாராகவே அதற்கு மாறாக அவ்வாசிரியரின் இச்சூத்திரத்துக்கு ஐந்து நிலப்பகுதி கூறக் கூடாமையானும், ஈருரைகாரரும் ஈண்டு ஐந்நிலம் என்பதற்கு நிலப்பகுதி யென்னாது இதில் ஐந்தும் முன்னைய சூத்திரத்திலேழுமான பன்னிரண்டுக்கும் அமையவேண்டி வேறுபொருள் காண முயல்வாரானார். |