பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை431

இளம்பூரணர் “ஐந்நிலம் பெறும்” என்பதற்குக் கந்தருவம் ஐந்துவகைப்படும் என்று கூறி, அவை களவு உடன்போக்கு கிழத்தியரிருவர் பரத்தையர் கூட்டம் ஆகக்கூட்டம் ஐந்துமாமென்பர். நச்சினார்க்கினியர், ஐந்நிலம் இவையென விளங்கக்கூறாமல் வாளா “ஐவகை நிலனும் பெறுதலின்” எனக்கூறிவிட்டு “ஈண்டு யாழோர் மேன” என்பதை அன்பினைந்திணைக் களவான கந்தருவமல்லாததும், ஆனால் அக்களவையே முதலாகக் கொண்டுவருவதுமான பிறிதொரு இரண்டாங் கந்தருவமாகும் என்று ஒரு புத்துரை புனைந்தார். இஃது இவர் அறிவு வளத்தின் அருமை காட்டுவதாகுமன்றி ஆசிரியர் கருத்தை விளக்குவதாயில்லை. “அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டமாந்” தமிழ்க்களவு “மறையோர்தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்லியாழ்த்துணைமை யோரியல்”பாகும் ஆரியக் கந்தருவத்தன்மையாம் என்று களவியல் முதற்சூத்திரத்தில்தெற்றெனத் தெளித்த தொல்காப்பியர், பிறிதியாண்டும் இதனின் வேறாயதோர் கந்தருவமும் தமிழ்நூலார்க் குடன்பாடாவதுளதெனக் குறித்தாரிலர். ஆகவே ஈண்டு நச்சினார்க்கினியர் கூறும் புத்துரை ஆசிரியர் கருத்தன்றென்பது விளக்கம். அன்றியும், நச்சினார்க்கினியரின் இவ்விரண்டாங் கந்தருவம் தமிழிலக்கணம் அறியும் களவு கற்பு எனும் இரு கைகோளினும் அடங்காதாகவே, தமிழிலக்கண நூலில் அதற்கிடனுமில்லை.

இனி, நச்சினார்க்கினியர், களவினை முதற்கந்தருவமென வேறு பிரித்து, அது நூல்களிற் புலவர் புனைந்துரைத்த கற்பனையளவே யமைவதெனவும், உலகியலில் நடைபெறுவது தாங்கூறும் இரண்டாங்கந்தருவமே யாகுமெனவும், களவியல் 13, 14, 15ஆம் சூத்திரங்களுக்குத் தாம்கண்ட வுரையில் வலியுறுத்தித் தமது இக்கருத்தையே பின் சிந்தாமணி நாமகளிலம்பகம் 158ஆவது செய்யுளுரையிலும் அநுவதிக்கின்றார். ஆசிரியரோ தம் தமிழிலக்கணநூலில் தாம் கூறும் அகப்பொருளனைத்தும் நாடகவழக்கும் உலகியல் வழக்கும் புலவரின் புலநெறி வழக்குமாவனவற்றுள் எதனையும் விலக்காது எல்லாத் தமிழ் மரபுகளையும்வடித்துத் திரட்டிக் கூறிப்போவதாக விதந்து விளக்கி வைத்தார். (அகம். சூத்திரம் 53), ஆகையால் ஆசிரியரின் தெளித்த கூற்றுக் கொவ்வாத நச்சினார்க்கினியருரை ஆசிரியரின் சூத்திரக் கருத்தாகாமை தெளியப்படும். எனைத்தாயினும் இச்சூத்திரம்