| 440 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
| சூத்திரம் : 51 | | | | காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. |
இதற்கு இளம்பூரணர், “உரைகூறல் மிகையெனவும் சூத்திரத்தால் பொருள் விளங்குமெனவும்” கூறியமைந்தார். நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்துக்குத் தமது வழக்கம்போற் புத்துரை கூறமுயன்று பெரிதும் இடர்ப்படுவாராயினர். நின்றாங்கமையும் நேரிய பொருள் தராது தொடர்தொறுஞ் சொற்களைப் பிய்த்து இட்டம்போல் இடம் மாற்றி வைத்துப் புதுவதோர் சூத்திரமாகத் தைத்து மருள் வரும் பொருள் தருவாரானார். “கிழவனுங் கிழத்தியும், சுற்றமொடுதுவன்றி, அறம்புரிமக்களொடு, சான்ற காமங் கடைக்கோட்காலை, சிறந்தது ஏமஞ்சான்ற பயிற்றல், இறந்ததன் பயனே” என்பது இவர் கொண்டுகூட்டிக் கண்ட புதிய சூத்திரமாம். இதற்கு அவர் தரும் பொருளாவது : “தலைவனுந்தலைவியும் உரிமைச் சுற்றத்தோடே கூடி நின்று, இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே தமக்கு முன்னரமைந்த காமத்தினையும் தீதாக உட்கொண்ட காலத்திலே, அறம்பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை யடிப்படுத்தல், யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு” என்பதாம். இதன்மேல் அவர் தரும் விசேட வுரை வருமாறு: “சான்ற காமமென்றார், நுகர்ச்சி யெல்லாம் முடிந்தமை தோன்ற; இது கடையாயினார் நிற்குநிலை யென்றுணர்த்தற்குக் கடையென்றார்; ஏமஞ்சான்றவாவன, வானப்பிரத்தமும் சந்நியாசமும்; எனவே இல்லறத்தின் பின்னர் இவற்றின்கண்ணே நின்று, பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப; என்றார். இவ்வீடு பேற்றினையின்றியமையாது இல்லற மென்பது இதன்பயன். இது காஞ்சி யாகாதோவெனின், ஆகாது, நிலையின்மை சான்றோர் கூறக்கண்டுதெளிதல் காஞ்சி. இஃது அன்னதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையால் தாமேயெல்லாவற்றையும் பற்றறத்துறத்தலின் அகப்பொருட் பகுதியாம்” என்பதாகும். |