பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை45

ஒப்பன என்பதைச் சுட்டும் குறிப்பு முற்றாம். ‘கலந்த’ என்னும் எச்சத்தைக் ‘காட்சி’ யென்பதனோடுங் கூட்டுக. ஈண்டுப் “பொழுது” காலம் காட்டாது, தலைப்பட்டுழி நிகழ்ச்சிகளுக்கு ஆகுபெயராம்; முதற்பொருளான காலம் முன்னரே கூறி முடிந்ததால் அது மீண்டும் கூறல் வேண்டா.

இங்குக், ‘கலந்தபொழு’ தென்பது பின்களவியல் இரண்டாஞ் சூத்திரம் கூறும் தலைமக்களின் தலையெதிர்ப்பாட்டையும், ‘காட்சி’ என்பது அக்களவியல் ஐந்தாஞ் சூத்திரம் கூறும் ‘அறிவுடம்படுத்தற்கு’க் குறிப்புநாடும் நோக்கத்தையும் முறையே குறிக்கும். கலத்தல் என்பது தலைப்படுதல் என்ற பொருளதாகும். ‘ஒருமூவேங் கலந்த காலை’ என்னுங் கம்பரடியும், ‘கலந்து போர்செய்தாரோர்சிலர்’ என்ற கந்தபுராண அடியுங் காண்க. கலப்பும் என்னாது கலந்த பொழுதும் என்றது முதலெதிர்ப்படுங்காலத்து நிகழும் காட்சி, ஐயம், துணிவு முதலிய பலவும் அடங்குதற்பொருட்டு. இச்சூத்திரத்தில் காட்சியென்பது முதலிற் கிழவனுங் கிழத்தியுந் தலைப்பட்டுக் காண்பதன்று; அது கலந்தபொழுது என்பதில் அடங்கும். எதிர்ப்பட்ட தலைமக்களிடை அவர் “அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை”நாடும் நோக்கத்தையே ஈண்டுக் காட்சியென்றார். பின் களவியலில் விளக்கப்படுமிவை யிரண்டும் புணர்தல் முதலிய ஐந்திணைகளுள் எவையுமாகா வெனினும், அகத்துறைப்பாட்டுக்களுள் இவையும் உரிப்பொருள்களாக ஆட்சிபெறுவதால், ஐந்திணைகளுள் அடங்காத உரிப்பொருள் உண்மைகூறு மிவ்விடத்திலிவை இயைபு பற்றிக் குறிக்கப்பட்டன.

“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
 நோக்கமிம் மூன்று முடைத்து”

எனுங்குறளில் தலைமக்களின் முதற்றலைப்பாட்டில் இருவரும் தம்முள் அறிவுடம்படுத்தற்குக் குறிப்பறிய “நாட்டமிரண்டும் கூட்டியுரைக்கும்” பெற்றி விளக்கப்படுதல் காண்க. முன்னலும் முயற்சியுமின்றித் தாமே தமியராய்த் தலைப்படல் கலந்த பொழுதாகும்; தலைப்பட்டவர், ஒருவர் மற்றவர் குறிப்பறியநாடும் நோக்கு கலந்த காட்சி (அறிவினாட்டம்) ஆம். குறிக்கொண்டு நோக்குந்தலைவன், தலைமகள் குறிப்புநோக்கா லவள் கருத்தும் தன்னதேபோற் காதல் கண்ணியதெனக் கண்டு தனக்குத்தான் தேற்றுமவன்கூற்றில்,