பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை47

சூத்திரத்தில் கூறியாங்கு நிலம்பொழுதிரண்டி னியல்பெனும் இரண்டே வகைகளை யாண்டும் உடையதாகும்.

குறிப்பு : ஈற்றேகாரம் தேற்றங்குறிக்கும். முதல், கரு, உரி என்ற அகப்பொருட் பகுதிகள் மூன்றனுள் உரிப்பொருளாவன ஐந்தொழுக்கமும், அவைபோல அகத்துறையிற் சிறந்துரிய தலைமக்களின் காதலொழுக்கங்கள் பிற சிலவுமாக வகைபெறுமென்பதை இந்நூலார் மேற் சூத்திரங்களில் விளக்கினார். அதுபோலவே கருப்பொருள்களும் பலவகைப்படுமென்பதை இனி வருஞ் சூத்திரத்திற் கூறுவர். இவை யிரண்டும் போலாது, யாண்டும் முதற்பொருளாவன நிலமும் பொழுதுமென்றிரண்டே வகைகளுள் அடங்குமென்பதை இயைபு நோக்கி இவ்விடைச் சூத்திரத்தால் ஐயமற வரையறுத்து வற்புறுத்துகிறார். இஃது இறந்தது காத்தல், கூறிற்றென்றல், முடிந்தது காட்டல் என்னும் உத்திகளால் அமையுமாதலின், கூறியது கூறலாகாது.

முதல் கரு உரி என முன்னே முறைப்படுத்திக் காட்டியவர் முதற்பொருள் வகையியல்புகளை முதலிற் கூறி, அதையடுத்துக் கருப்பொருள் கூறாமல் உரிப்பொருள்களின் இயல் கூறினார், இவையிரண்டும் அளவு பட்டமையும் இயைபு நோக்கி. அவ்வியைபை வலியுறுத்தும் பொருட்டே ஈண்டு இச்சூத்திரத்தால் முடிந்தது காட்டித் தந்துணிபுரைத்தார். உரிப்பொருளனைத்தும் தலைமக்களின் அன்பினைந்திணை வகைகளில் அமைந்தடங்கும். முதற்பொருள்களும் நிலம்பொழுதெனும் இரண்டே வகையிலடங்கும். இவையிரண்டும் போலாது கருப்பொருள்வகைகள் எண்ணிறந்து ஏற்றபெற்றி விரியுமியல்புடையவாதலால், அளவுபட்ட இவையிரண்டும் முற்கூறி, இவற்றின்பின் இவையல்லாத அளவிறந்தனவாய் வரும் பலவும் கருப்பொருள் வகைகளாகுமென்பது விளங்கக் கருப்பொருளியல் இறுதியிற் கூறுகின்றார். இவ்அளவு முறையான் வைப்பு முறையும் அமைகின்றது. முதற்பொருள் இரண்டே வகைகளுள் அடங்குவதாகலின் முதலில் வைக்கப்பட்டது. உரிப்பொருள்கள் அகவொழுக்கங்களுள் சிலவாக ஐந்து வகைகளில் அடங்குதலால் அவற்றை முதற்பொருளின் பின்னர்க்கூறி, அவ்விரு வகை யளவானும் அடங்காமல் பலபடவிரியும் கருப்பொருள்களை அவ்விரண்டின் பின் அமைத்துக் கூறினார்.