பக்கம் எண் :

50நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

எனத் திணைப்பெயரே கொள்ளும் என்றமைத்ததும் அகத்துறைகளில் திணைக்குரிப் பொருள்களான ஒழுக்கங்களே சிறப்புடையவாதல் பற்றியேயாம். ஆனால் ஒரு நிலத்திற் பிறிதொழுக்கம் நிகழ்வதாய்ப் புலனெறி வழக்கஞ் செய்யுமிடத்து அவ்வந்நிலத்தொடு இயற் பொருத்தமில்லாத கருப்பொருள்களைத் திணைநோக்கிக் கூறநேரின், நிகழுமொழுக்கத்துக்கு அக்கருப்பொருள்கள் ஏற்புடையனவாய் அமையும் பயனுடைத்தாதல் வேண்டுமென்று இந்நூலார் ஈண்டு ஒப்பக்கூறியமைத்தார். காடு, மலை, ஊர், கடல் என்பவற்றுள் கூறுவது யாதாயினும் அதற்கியையப் பொருத்தமுடைய கருப்பொருள்களமையக் கூறுதலொன்று, அன்றி அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணைக்குப் பொருந்த அமைவதொன்றாம். கருப்பொருள்கள் தமக்குரிய நிலம் பொழுதுகளோடு இயைய வாராவிடங்களில், அவ்வந்நிலத்து நிகழும் ஒழுக்கத்தோடு அமையும் பயனுடையவாதல் வேண்டும். ஈண்டு ‘நிலத்தின் பயத்த’ என்பது நிகழும் ஒழுக்க நிலத்தைக் குறிக்கும். அஃதாவது, அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணையைச்சுட்டும். (நெய்தற்) கடற்கருப்பொருள்களைக் காட்டொடு சேரக்கூறுமிடங்களில், அப்பொருள்கள் காட்டிற்குரிய பயன்தருமென்பது இச்சூத்திரக் கருத்தன்று; காட்டில் நெய்தற்றிணை நிகழுமிடத்துக் காட்டிற் குரியவல்லாக் கருப்பொருள்கள்வரின், அவை ஆங்கே நெய்தற்றிணைக்கேற்பனவாய் அமையக் கூறுவது புலனெறி வழக்காம் என்பதே இச்சூத்திரம் நுதலிய பொருளாகும்.

“பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
 விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
 விரவுமல ரணிந்த வேனிற் கான்யாற்றுத்
 தேரொடு குறுக வந்தோன்
 பேரொடு புணர்ந்தன் றன்னையிவ ளுயிரே”

(ஐந்குறு. 367)

இதில், பாலைக்குரிய வேனிற்காலத்து, முல்லைக் கான்யாற்றில், புணர்வுத்திணையில், பாலைக்கோங்கின் பசுமலரோடு குறிஞ்சி வேங்கைப்பூவும் விரவிப் புணர்ந்து பிரிந்தோர் ஒழுக்கொடு பொருந்தவந்த செவ்வியும் வாய்ப்பும் திகழ்வது காண்க.