பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை51

சூத்திரம் : 20 
 பெயரும் வினையுமென் றாயிரு வகைய
திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே.

கருத்து : இது, கருப்பொருள்களொடு அடைவுடைய அகத்திணைக் குரியரான அவ்வந் நிலமக்களின் பெயர்ப்பாகுபாடு கூறுகிறது.

பொருள் : திணைதொறு மரீஇய திணைநிலைப்பெயரே = ஒவ்வோரொழுக்கத்தொடும் பொருந்திய முல்லை முதலிய நிலங்களில் புலனெறி வழக்கில் அகத்திணைக்குரியராய்க் கூறப்படும் மக்கட்பெயர்கள்; பெயரும் வினையுமென்றாயிருவகைய = அவ்வந்நிலத்தானமையும் பெயர்ப்பெயரும், அந்நிலத்து மக்களின் தொழிலான் அமையும் வினைப்பெயரும், என்று அவ்விரண்டு கூறுபாட்டினையுடைய வாகும்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசைநிலை, பெயரும் வினையும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை. ‘திணைநிலை’ என்பது ஆகுபெயராய்த் திணைநிலையினரைக் குறிக்கும்.

நானிலங்களினும் உள்ள மக்கள், அகத்திணைக் குரியராய்ச் செய்யுளிற் கூறப்படுங்கால், முல்லை முதலிய அவ்வத்திணை நிலங்களுக்குரிய இயல் இயைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று; அவ்வாறன்றித் தத்தம் தொழிற்கியைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று. இவ்விருமுறைகளே தமிழகத் தொல்லை மரபொடு அடைவுடையவாகும். தொல்காப்பியர் காலத் தமிழுலகில் தமிழரிடைப் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுடன் வேறுபாடுடைய சாதிவகுப்புக்கள் கிடையா. அதனால் அக்காலத் தமிழ் மக்கள் தத்தம் நிலத்துக்கேற்றாங்கு ஆயர், குறவர், உழவர், மறவர் என்றழைக்கப்பட்டார்கள்.

இனி, ஒரு நிலத்துள்ளார் அந்நிலத்திற்குரிய தொழில் மேற்கொள்ளாது பிறிது தொழில் கையாளுவராயின், அவரவர் செய்தொழில் வேற்றுமையால் தொழில் குறிக்கும் ஏற்புடை வினைப்பெயர்களாலும் அழைக்கப்படுவர். நுளைஞர், பரவர் என்பன நெய்தனிலஞ்சுட்டிய மக்கட்பெயர், வலையர், உமணர் என்பன நிலஞ்சுட்டாது, வலைவீசிப் பிழைக்குந் தொழிலுடையாரையும், உப்பு உண்டாக்கி விற்கும்