பக்கம் எண் :

52நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தொழிலுடையாரையும் சுட்டும் வினைப்பெயர்கள். தொழில் எதுபுரிந்தும் நெய்தனிலம் வதிபவரைப் பரவர் அல்லது நுளைஞர் எனவழங்கல் ஒரு முறை; அப்போது அப்பெயர் நெய்தனிலமக்கள் என்னும் பொருட்டாகும். இனி எந்நிலத்துறையினும் வலைத் தொழில் புரிந்து வாழ்வார் என்பதைக் குறிக்குங்கால், வலையர் என்னும் வினைப்பெயரால் அத்தொழிலுடையாரைச் சுட்டுவது ஒருமுறை. தமிழகத்திற் பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதிவகுப்புக்கள் இல்லாமையானும், தமிழ் மக்களெல்லாரும் விரும்பியாங்குத் தத்தமக்கேற்புடைய தொழில் கொள்ளும் உரிமையுடையராதலாலும், நிலம் தொழில் வகைகளால் வேறுபடினும் உணவு மணங்களில் வேறுபாடின்றி யாண்டும் எல்லாரும் ஏற்றபெற்றி கலந்து ஒன்றி வாழ்ந்தாராதலானும், அவர் அகவொழுக்கங்கூறும் புலனெறி வழக்கில் அக்காலத்தவரிடை நிலைபேறுற்ற நிலப்பெயர் வினைப்பெயர்களால் தமிழ் மக்கள் அழைக்கப்படும் மரபுண்மையைத் தொல்காப்பியர் ஈண்டு விளக்கிப் போந்தார். நிலம்பற்றிய மக்கட் பெயர், பெயர்ப் பெயர்; செய்யும் வினைபற்றிய மக்கட்பெயர் வினைப்பெயர்.

அகம் 110ஆம் பாட்டில், போந்தைப் பசலையார், துளைச்சியைத் தலைவியாகவும், நெடுந்தேரூரனைத் தலைவனாகவும் திணைநிலைப்பெயர் அமைத்துக் கூறியுள்ளார். நற்றிணை 45ஆம் பாட்டில்,

“நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
 கடுந்தேர்ச் செல்வன் காதற்” றலைமகனாகவும்,

“நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி, யினப்புள் ளோப்பும்” புலவுநாறும் பரவர்மகள் தலைமகளாகவும், இவ்வாறு இவ்விருவேறு நிலமக்கள் காதற்றலைமக்களாய் அகத்திணைக்குரியராயமைந்திருப்பது இங்குக் கருதத்தக்கது. அகம் 280ஆம் பாட்டில், பரவர் மகளைத் தலைவியாகவும், பிறிதொரு நிலமகனைத் தலைவனாகவும் அமைத்து அம்மூவனார் கூறியதும் அக்காலத் தமிழ்மரபு அதுவாதலான் என்பது வெளிப்படை. இன்ன பல பழம்பாட்டுக்களால் பண்டைத் தமிழகத்தில் நானில மக்களுள் மணமும் உணவும் பிறப்பு நிலை வினைகள் பற்றி வரையப்படாமல் கலந்து கையாளப்பட்டன என்பது தெள்ளத்தெளியக் கொள்ளப்படும். மரபியலில் காணப்பெறும்