பக்கம் எண் :

54நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோனே. . . . . . தொல்காப்பியன், ” எனத் தொல்காப்பியரின் பாயிரமும் வற்புறுத்துவதானும், இங்குத் தொல்காப்பியரின் சூத்திரங்கள் குறிப்பன எல்லாம் ஆரியவருண அறங்களையல்ல, தமிழ் மரபும் தமிழர் வழக்கங்களுமே யாமென்பது தேற்றம். இவ்வுண்மைகள் இனிவருஞ் சூத்திரங்களுக்கும் ஒக்கும்.

சூத்திரம் : 21 
 ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்;
ஆவயின் வரூஉங் கிழவரு முளரே.

கருத்து : இது, மேற்சூத்திரத்திற் கூறிய திணை நிலைப்பெயர் வகைகளும் அப்பெயருடையாரின் அகத்திணைக்குரிமையுங் விளக்குகிறது.

பொருள் : ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர் = ஆயர் வேட்டுவர் என்பன ஆண்பால் சுட்டும் முல்லை நில மக்களின் திணை நிலப்பெயர்களாம்; ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே = அந்நிலத்து அகத்திணைக்குரிமை கொள்பவரும் உளராம்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசைநிலை.

ஆயர் என்பது முல்லைநில மக்களுக்குத் திணைப்பெயராகும். அதுவேபோல், வேட்டுவர் என்பதும் முல்லைநில மக்கட் பெயரென்று இளம்பூரணரும், குறிஞ்சி நில மக்கட் பெயரென்று நச்சினார்க்கினியரும் கூறுவர். இவருள் இளம்பூரணர் கூற்றுப் பொருட் சிறப்புடையது. “மாயோன் மேய” என்னும் முன் 5ஆஞ் சூத்திரத்தில் திணைநிலங்களில் முதலில் வைத்தெண்ணிய முல்லைநிலை மக்களுக்குரிய பெயர்களுள், ஆயரென்னும் நிலப்பெயரும் வேட்டுவரென்னும் வினைப்பெயரும் அந்நிலத் தாண்மக்களின் திணைப்பெயர்களாக இச்சூத்திரத்தில் தொல்காப்பியர் எடுத்துக்காட்டினாரெனக் கொள்வதே ‘பெயரும் வினையு’ மென்னும் மேற்சூத்திரக் கருத்தை விளக்குவதற்கு அடைவுபட அமைவதாகும். வேட்டுவரென்பது முல்லைத் திணைமக்களின் ‘வேட்டு’ வினைசுட்டுத் திணைப்பெயராகும்.