பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை55

அதனால், இந்நூலார் மேலே “திணைநிலைப்பெயர் பெயரும் வினையுமென் றாயிருவகைய” எனத் தொகுத்துக் கூறியதை, இச்சூத்திரத்தில் வகுத்து மெய்ந்நிறுத்து விளக்கினார்.

இதில் திணைப்பெயரென்றும், இதற்கு முன்னும் பின்னும் வரும் சூத்திரங்களில் திணைநிலைப் பெயரென்றும், வருவன அகவொழுக்கத்துக் குரிமைகொள்வார் பெயரையே குறிக்கும். அக்காலத் தமிழ் மரபுக்கும், உண்மையுலகியல் வழக்குக்கு மேற்பத், தமிழ் மக்களெல்லாரும் அகத்திணைத் துறைகளில் காதற்றலைமக்களாதற் குரியர் என்பதை இந்நூலார் இங்குப் பலசூத்திரங்களாற் தெளிக்கின்றார். நாடாட்சிக்குரியரே அகத்திணைக் கிளவித் தலைமக்கள் ஆவதற்குரியர் போலவும், அல்லாத நானிலமக்களும் வினைவலர் அடியார் முதலாயினாரும் அன்பினைந் திணைத்துறைகளில் கிளவித்தலைவர் ஆகார் போலவும், பொருள்படுமாறு இச்சூத்திரங்களுக்குப் பிறர் கூறுமுரை பொருந்தாது. ‘தலைமக்கள்’ என்பது ஈண்டு அகத்திணைக் கிளவித் தலைமக்களையே குறிக்கும்; நாடாட்சித் தலைமை குறிப்பது ஈண்டைக்கு வேண்டப்படா.

பரத்தி ஒருத்தி, “நியமமூதூர்க் கடுந்தேர்ச்செல்வன் மகனின்” மெய்க்காதலை யிகழ்ந்து, யாம் “புலவு நாறுதும், செலநின்றீமோ; (கடலின்) பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ?அன்றே” என மறுப்பவள், தமக்கேற்ற தலைவர் தம் மினத்தவருள்ளுமுளர் எனத் தெளித்து, “எம்மனோரிற் செம்மலுமுடைத்தே” (நற். 45) என விளக்கும் தருக்குரை, தமிழர் எவரேனும் அகத்துறையிற் றலைமக்களுரிமையனைத்துமுடையர் என்னுமுண்மையை வலியுறுத்துதல் காண்க. இன்னும் இதுபற்றி மேற்சூத்திர உரையிற் காட்டிய பாட்டுக்களுடன், பின்வரும் பண்டைச் சான்றோர் செய்யுளடிகளாலும் தமிழரிடை நிலம் தொழில் நிலை பிறப்பு வகைகளால் அகத்திணைக்குரிமை யாருக்கும் விலக்கில்லையென்பது தெற்றென விளங்கும். “நெல்லும் உப்பும் நேரேயூரீர், கொள்ளீரோ வெனச் சேரிதோறும்”உப்புச் சுமந்து விற்றுத்திரியும் உமண்மகளைத் தலைவியாக்கி, அம்மூவனார் கூறிய அகம் 390ஆம் பாட்டு இவ்வுண்மையை வலியுறுத்தும்.

“. . . . . . . . சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளை”த் தலைவியாக்கும் “மால்வரை” என்னும் கபிலர் குறும்பாட்டும், (குறுந். 95)