பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை59

இப்பெயர் வகைகளைப் “பெயரும் வினையு” மென்னும் முன் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியர் கூறுமுரைக்குறிப்புக்களா னோராங்கறிக.

மேற்சூத்திரத்தில் முல்லைநில மக்கள் தலைமக்களாதல் கூறப்பட்டது. அந்நிலத்துப் பெயர்ப்பெயருடைய ஆயரும், வினைப்பெயருடைய வேடரும் தலைமக்களாய குறிப்புடைய பழைய பாட்டுக்களுமாங்கே காட்டினோம். இனி, முல்லை யொழிந்த மற்றைய மூன்று நிலமக்களுமவ்வாறே காதற்றலைமக்களாவர் என இச்சூத்திரம் கூறுதலால், அதற்குச் செய்யுள் வருமாறு.

(1) குறிஞ்சிநில மக்கள் தலைமக்களாதற்குச் செய்யுள்:

(அ) “யானை யுழலு மணிகிளர் நீள்வரைக்
  கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
  ஏனலு ளைய வரவுமற் றென்னைகொல்?
  காணினுங் காய்வ ரெமர்”
 (திணைமொழி. 6)

இதில், கானக்குறத்தி தலைவியாவதைக் காண்பாம்.

(ஆ) “குன்றக் குறவன் காதல் மடமகள்”
 (ஐங். 256)

எனுங் கபிலர் குறுநூற்றடியுமது.

குறத்தியர் தலைமகளிராகச் சுட்டும் பிற பாட்டுக்களை மேலே குறித்தோம்.

(2) (அ) “அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை”

எனும் குறும்பாட்டில் (குறுந். 184) “நுண்வலைப் பரதவர் மடமகள்” தலைமகளாதலறிக.

இன்னும்,

(ஆ)  “பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா
  திருங்கடன் மூழ்குவார் தங்கை இருங்கடலுள்
  முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
  ஒத்தனம் யாமே யுளம்”

(திணைமாலை நூற்றைம்பது. 33)