பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை61

இறந்ததுதழீஇயும், பின்னர் ‘ஏவன் மரபினேனோரும்’ என்பதை நோக்கி எதிரது தழீஇயும்வந்த எச்சவும்மைகளாம்.

ஈண்டுப் புறத்தென்பது, மேற் சூத்திரங்களிற் கூறப்பட்ட நானிலமக்கள் வகுப்புக்களின் ஐந்திணைக்குப் புறத்தேயெனப் பொருள்கொண்டு, பழைய வுரைகாரர் இச்சூத்திரம் அடியோர் வினைவலர் போன்றவர்க்கு ஐந்திணை யொழுக்கம் உரித்தன்றெனவும், அவற்றின் புறத்தவான கைக்கிளை பெருந்திணைகளே அத்திறத்தார்க்குரிய அகவொழுக்கங்களாமெனவும், கூறுவாராயினார். அவர் கூற்றுக்கள் சூத்திரச் சொற்றொடர்களுக்கு அமையாமையோடு, முன்னுக்குப்பின் அவ்வுரையாளர் கூறுவனவற்றிற்கே மாறாக முரணுவதாலும், அவை பொருளன்மையறிக. இளம்பூரணர் இச்சூத்திரத்தின் கீழ், “இது, நடுவணைந்திணைக்குரிய தலைமக்களை (முன்) கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை யுணர்த்துதல் நுதலிற்று” என்று குறிக்கின்றார். அன்பினைந்திணையான ஒத்தகாமம் மேற்கூறிய நானில மக்களுக்குமட்டும் அமையுமன்றி, இச்சூத்திரங்கூறும் அடியோர் வினைவலர்களுக்கு என்றும் இன்றென்பதே இளம்பூரணர் கருத்தென்பது ஈண்டவர் கூறுங்குறிப்பால் அறிகின்றோம். மேன்மக்களே என்றும் அன்பிணைந்திணைக்குரியர், மற்றையோர் இழிதகவுடைய கைக்கிளை பெருந்திணைகளுக்கே உரியராவர் என்பதிவர் கருத்தாமேல், முன் முதற்சூத்திர உரையில், பிரமமுதல் தெய்வ மீறாக “நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும். அது பெருந்திணையெனக் கூறப்பட்டது” என்றிவரே கூறுதல் முரணாகும். ஆனால், பெருந்திணை பெருவழக்கிற்றென்பதும், அது மேன்மக்கள்மாட்டு நிகழ்வதென்பதும், ஆண்டிவர் கூறிப்போந்தார். அன்றியும், ‘ஏவன் மரபின்’ என்னும் அடுத்த சூத்திரத்தின் கீழ் “ஏவுதன் மரபையுடைய ஏனையோரும் கைக்கிளை பெருந்திணைக்குரியர்”என்றிவரே கூறுகின்றார். எனவே, இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் இவ்வுரையாசிரியர் கைக்கிளை பெருந்திணைகளுக்கு மேன்மக்கள் பெரும்பாலும் தலைமக்களாதற்குரியர் என்று தம் கருத்தை வலியுறுத்துபவர், இச்சூத்திரத்தின் கீழ் அதற்கு மாறாகக் கீழ்மக்களே கைக்கிளை பெருந்திணைகளுக்குரியர் என்று கூறுவது மாறுகொளக் கூறலென்னுங் குற்றத்திற்கவரை யாளர்க்குகிறது.