| 62 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இவ்வாறே, நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதும் பொருந்தாது. கைக்கிளை பெருந்திணைகளை ஆசிரியர் இவ்வியலின் இறுதியில் 50, 51ஆம் சூத்திரங்களாக நிறுத்தி, அவற்றிற்கு முன்னெல்லாம் இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் அன்பினைந்திணைப் பகுதிகளையே கூறிச் செல்வதால், இதில் அவர் கருத்து வேறுபாடு சுட்டப் பெறாத நிலையில் ஐந்திணைகளுக்கு வேறான கைக்கிளை பெருந்திணைகளை அவர் கூறுவதாகப் பொருள் காண முயல்வது அமைவுடையதாகாது. இனி, கைக்கிளை, பெருந்திணை போலவே இழிதகவுடைய பொருந்தாக்காமம் என்று இவ்வுரையாளர் கருதுவதால், ஈண்டுக்கூறப்படும் அடியோர் வினைவலராகிய மேன்மக்களல்லாதார் இழிதகவுடைய அப்பொருந்தாக் காமத்திற்கு உரியரென்று இவர்கள் பொருள் கூறுகின்றனர் போலும். தொல்காப்பியர் பெருந்திணை யொன்றையே பொருந்தாக்காமமெனக் கூறி, கைக்கிளையைக் குற்றமற்ற ஒருதலைக்காதல் என வேறுபடுத்தி விளக்குகின்றார். ஒருதலைக்காதல் கைக்கிளை. காதலித்தோரைக் காதலிக்கப்பட்டோரும் காதலித்தால், அது ஒத்தகாமத்தின்பாலடங்கும். அவ்வாறின்றிக் காதலிக்கப்பட்டோர்பால் காதலின்மை தெளியப்பட்டால், ஆண்டது பெருந்திணையிலடங்கும். அவ்வாறடக்காமல், பொருந்தாக்காமமான பெருந்திணையும் ஒத்த காமமான அன்பினைந்திணையும் வெவ்வேறுகூறி, அவற்றின் வேறுபட்டதாய்க் கைக்கிளையை இந்நூலார் பிரித்து இயல் விரித்தலால், கைக்கிளை அன்பொத்த இருதலைக்காமம் அன்றாயினும் அன்பற்ற பெருந்திணையு மாகாமல், குற்றமற்ற ஒருதலைக்காமமாய் எல்லோர்பாலும் கடியப்படாத நல் ஒழுக்கம் என்பதே தொல்காப்பியர் கருத்தென்பது தெளிவாகும். “பாங்கரும் பாட்டாங்காற் கன்றொடு செல்வேம்” என்னும் முல்லைக்கலியும், “என்னோற்றனை கொல்லோ”என்னும் மருதக்கலியும், “அணிமுக மதியேய்ப்ப” என்னும் குறிஞ்சிக்கலியும், அடியோர்; வினைவலர் அகத்திணைத் தலைமக்களாதற் குதாரணமாகும். அவை தலைமகளின் அன்புடன்பாடு சுட்டலின், பெருந்திணையும் கைக்கிளையுமாகா; இருவருமொத்த அன்புத் திணையேயாம். 1. அடியார் அகப்பொருட்டலைவராதற்குச்செய்யுள் : “என்னோற்றனை கொல்லோ” (கலி. 94) என்னு மருதக்கலியில், “ஓஒகாண், நம்முணகுதற் றொடீஇயர் நம்முண், |