பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை65

“தொழில் பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்; . . . . . . சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு” எனவருமடிகளில் உயர் குடிமக்களின் ஏவலரல்லா “வினைவலரும்”, பிறர் தம் ஏவலை மரபாகக்கொண்ட ஏனோரும் பழந்தமிழகத்துண்மை கூறுகிறது. பின் கட்டுரை காதையில் “ஏவலிளைஞர் காவற்றொழுது” எனவருதலால், “ஏவல்மரபு”, பிறரை ஏவும்பெற்றி குறியாது, பிறரேவலைத் தாம்புரியு நிலையையே குறிப்பது தெளிவாகும். இப்பழந் தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளடிகள், தொல்காப்பியர் சுட்டிய “அடியார், வினைவலர், தனிக்குடி ஏவலர், ஏனைய ஏவன் மரபினர், ” எனும் கீழோர் நால்வரும் தமிழகத்துண்மையை வலியுறுத்தல் கருதற்குரியது.

இனி, பிறரேவல்புரியும் ஏவன்மரபினரும் அகத்துறைத் தலைவராதற்குரிய ரென்பதற்குச் செய்யுள்:

“இகல்வேந்தன் சேனை இறுத்த வாய்போல”

(கலி. 108)

என்பதில் “அளைமாறிப் பெயர்தருவா யறிதியோ?. . . . ” என்றானுக்கு,

“புளத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ?
 இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ?
 தினைத்தாளுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ?”

எனத் தலைவி கூறுவதால், இது பிறர் ஏவல் புரிவோர் அகத்துறையிற் காதற்றலைமக்க ளாதற்குரிமை கூறுதலுணர்க.

சூத்திரம் : 25ஓதல் பகையே தூதிவை பிரிவே

கருத்து : இது, மேல் முதற்சூத்திரத்திற் கூறிய ஏழுதிணைகளுள் குறிஞ்சி முதலிய நடுவணைந்திணைகளின் பொதுவியல்புகள் இதுவரையுங் கூறி, இனி அவ்வைந் திணைகளுள் நடுவணதானதும், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோள்களுக்கும் பொதுவானதும், தனக்கென நிலம் பகுக்கப்படாததுமாகிய பாலையென்னும் பிரிவொழுக்கத்தின் சிறப்பியல்கள் கூறத்தொடங்கிப், பிரிவின் வகைகளுள் சில உணர்த்துகிறது.