| 70 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பொருள் : மேவிய சிறப்பின் ஏனோர் = வேந்தனொடு பொருந்திய சிறப்புடைய வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலியோர்; படிமைய முல்லைமுதலாச் சொல்லிய = நில வகுப்புக்களான முல்லைமுதற் நெய்தலிறுதியாக (மேலே ஐந்தாஞ் சூத்திரத்திற்) சொல்லப்பட்ட நால்வகை உலகங்கள்; முறையாற் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் = முறைவழுவித் தப்பியது முறையாற் றப்பாதாதலைவிரும்பியும்; இழைத்த ஒண்பொருள் முடியவும் = (யாவரும்) வினைசெய்து உயர்ந்த பொருளை ஆக்கவும்; பிரிவே = பிரிதல் நிகழும். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. படிமைய என்பதில் படி நாட்டை அல்லது நிலத்தைக் குறிக்கும். இனி, படிமைய என்பதற்குப் பகைமையுடைய அல்லது கீழ்ப்படிந்த எனப்பொருள் கோடலும் பொருந்தும். பாலைத் திணையாகிய பிரிவு அறுவகைப்படும்; ஓதல், தூது, பகை, காவல், பொருள், பரத்தை என. அவற்றுள், பரத்தையிற்பிரிவு கைகோளிரண்டில் கற்பளவிலிடம் பெற்றுக் களவுக்கமையாமையின், அப்பிரிவு பின்னர் அத்தொடர்புடன் கூறப்படும். ஆதலின் அதைநீக்கி, மற்ற ஐந்தும் இங்குக் கைகோளிரண்டிற்கும் பொதுவாகக் கூறப்பட்டன. அவ்வைவகைப் பிரிவுள், ஓதல் தூது காவல் மூன்றும் உயர்ந்தோர்க்கே யுரியன; பகை பொருட் பிரிவுகள் யாவர்க்கும் ஒப்பவுரியன. ஓதல் பகை தூதுபோலவே, பொருள் பற்றியும் காவல்பற்றியும் பிரிவு நிகழ்தல் உலகியலும், மரபும் ஆதலின், அவற்றுள் முதல் மூன்றும் முன்கூறியதால் காவற்பிரிவும் பொருட்பிரிவும் இச்சூத்திரத்திற் கூறப்பெற்றன. வேந்தனொடு சிவணிய ஏனோர், தம்பொருட்டு ஓதல் நுதலியும், வேந்தன் பொருட்டுத் தூது பகைதெறல் நுதலியும் பிரிவது போலவே, நாடுகாவல் பற்றியும் பொருள் முடிக்கவும் பிரிவுமேற்கொள்ளுவது மரபு என்பது இச் சூத்திரத்தில் விளக்கப்பட்டது. வேந்தனுக்குப் பகைதெறத்தானேசேறலியல்பாயினும், பிறநாடு காவல்பற்றியும் பொருள்பற்றியும் பிரிதல் சிறந்ததன்றாகும். அதனால், மன்னற்குத் தானே பகைவயிற் சேறலுண்டென மேற்சூத்திரத்திற் கூறிய தொல்காப்பியர் அவனுக்குக் காவல் பொருட்பிரிவுகள் கூறாது, அவனொடு மேவிய சிறப்பினையுடைய ஏனைய உயர்ந்தோர்க்கு இப் பிரிவுகளை இதில் விதந்து கூறினார். |