| 72 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பொருள் : மேலோர் முறைமை = மேலே வேந்தனென்றும் வேந்தனொடு சிவணிய ஏனோரென்றும் மேவிய சிறப்பினேனோரென்றும் குறிக்கப்பட்ட மேலோர்களுடைய பிரிவு பற்றிய மரபெல்லாம்; நால்வர்க்கு முரித்தே = தமிழகத்தில் நானில மக்களுக்கும் ஒப்பவுரியன. குறிப்பு : மேலோர் பிரிவு ஓதல், தூது, காவல், பற்றியாமென்பது மேலிரு சூத்திரங்கள் குறித்தன. இதற்குப் பிறர்கூறும் வேறுபொருள்கள் சூத்திரக் கருத்தன்மை, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபட வுரைகூறுதலான் விளங்கும். மேலோர் தேவரென்பர் இளம்பூரணர்; வணிகரென்பர் நச்சினார்க்கினியர். தேவரைப் பற்றிய குறிப்பு ஈண்டு வேண்டப் படாமையானும், நான்கு வருணத்தாருள் வணிகர் மேலோராகா மூன்றாம் வகுப்பினரேயாதலானும், இவ்வீருரையும் சூத்திரக்கருத்தோடு மாறுபடும். அது போலவே, நால்வர் என்பதை நான்கு வருணத்தார் என்று இளம்பூரணரும், வணிகரை விலக்கி வேளாளரை இருவகையராக்கி அந்தணரரசரொடு கூட்டி நால்வர் என நச்சினார்க்கினியரும், தம்முள் மாறிக்கூறுவதும், அவ்விரு கூற்றும் தொல்காப்பியர் கருத்தன்மை காட்டும். தமிழகம் முல்லை முதலிய நானிலமாகத் திணைபற்றிப் பகுக்கப்படுமென்று மேலே 2, 5ஆம் சூத்திரங்களிலும், அந்நானில மக்களும் திணைதொறு மரீஇய திணைநிலப் பெயரொடு அகத்துறைகளில் கிழவராவரென 20, 21ஆம் சூத்திரங்களிலும் விளக்கியிருப்பதால், ஈண்டு நால்வரென்பது அந்நானில மக்களையே குறிக்கும். அந்நானிலத்தும் அடியோர் முதலிய கீழோரும், வேந்தர், வேந்தரொடு சிவணிய ஏனாதியர் முதலிய மேலோரும் உளராதலை, மேலே 23, 24, 26, 27, 28ஆம் சூத்திரங்களில் இந்நூலார் விளக்கியுள்ளார். அதனால், இதில் மேலோரென்றும் நால்வரென்றும் குறிக்கப்படுவோர், இவ்வியலில் முன் விளக்கியுள்ள வேந்தரொடு சிவணியோரும் நானிலத் தமிழ்மக்களுமேயாவர். அந்நால்வகைத் தமிழ் மக்களும் வேந்தரொடு சிவணிய மேலோரொப்ப ஓதல் தூது காவல் மேற்கொள்வதும், அதுபற்றிப் பிரிதலும் மரபென்பது இதில் விளக்கப்பட்டது. இனி, யிவ்வாறின்றி ‘நால்வர்’ என்பது நான்கு வருணத்தார் என்றும், ‘மேலோர்’ என்பது அவருள் இருபிறப்பாளராய மேல்வகுப்பினர் மூவரென்றும், அல்லது அவருள்ளுஞ் சிறந்த |