| 76 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
செலன்மாண் புற்றநும் வயின்வல்லே வலனா கென்றலும் நன்றுமற் றில்ல. ” (இறங்கு குடிக்குன்ற நாடன், அகம். 215) இவ்வாறே மற்றைப் பிரிவுகளும் வந்துழிக் கண்டுகொள்க. | சூத்திரம் : 32 | பொருள்வயிற் பிரிதலும் அவர்வயி னுரித்தே உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. |
கருத்து : இது, மேலதற்கோர் புறனடை; குறுநில மன்னர்க்குப் பொருட்பிரிவும் உண்டென்று கூறுகின்றது. பொருள் : பொருள்வயிற் பிரிதலும் = பொருள் பற்றிய பிரிவும்; அவர்வயினுரித்தே = மேற்குறித்த குறு நிலமன்னர்களுக்குரியதாகும்; உயர்ந்தோர் பொருள் வயின் ஒழுக்கத்தான = பொருள்பற்றி உயர்ந்தோரின் ஒழுக்கத்தொடு பட்டவிடத்தில். குறிப்பு : வேந்தரனைய குறுநிலமன்னர்க்குத், தற்பேணல் முதலிய பொதுவற மாற்றும்பொருட்டுப் பொருட்பிரிவு பொருந்தாது; காடு திருத்தி நாடாக்கல், குளந்தொட்டுக் கோயிலெடுத்தல், படைபேணி நாடாளல் போன்ற மேலொழுக்கம்பற்றி அஃதமையும் எனக்குறித்தல் இதன் கருத்தாகும். வேந்தர் வினையனைத்தும் குறுநில மன்னர்க்குப் பாலைத்திணையில் உரியவாகும் என மேலே குறிக்கப் பட்டமையால், வேந்தனுக்கு விலக்கப்பட்ட பொருள்வயிற்பிரிவு குறுநில மன்னர்க்கும் விலக்கோ எனுமையமகற்றி, அவர்க்கது கடிவரையின்று என்பதை இந்நூலார் இச்சூத்திரத்தால் விளங்கவைத்தார். “அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்” (கலி. 11) என்னும் பாலைக்கலி யடிகள் இச்சூத்திரக் கருத்தை விளக்குவதறிக. |