| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 77 |
மேல் ‘பெயரும் வினையும்’ என்னும் 20ஆம் சூத்திர முதல் இதுவரையுள்ள சூத்திரங்களால், தொல்காப்பியர் தமிழகத்தில் அகத்திணைக்குரியாரை வகைப்படுத்திக் கூறினார். நானிலமக்களும் எல்லாத்திணைக்கு முரியரென்பதை ‘ஆயர்வேட்டுவர்’ ‘ஏனோர் பாங்கினும்’ என்னும் 21, 22ஆம் சூத்திரங்களில் விளக்கினார். அவரைப்போலவே, அடியோர், வினைவலர், ஏவலர், ஏவலரனையவர் ஆகிய கீழோர் நால்வரும் அகத்திணைகளுக்குரிமை கொள்வரென்பது ‘அடியோர் பாங்கினும்’, ‘ஏவன் மரபின்’ என்னும் 23, 24ஆம் சூத்திரங்களில் விளக்கப்பட்டது. பிறகு அகத்திணையைந்தனுள் சிறந்த பாலைத்திணையின் வகைகளும், அவைபற்றிய பிரிவுகளுக்குரியார் வகைகளும் ‘ஓதல்பகையே’ என்னும் 25ஆம் சூத்திர முதல் ‘பொருள்வயிற் பிரிதலும்’ என்னு மிச்சூத்திரம் வரை விளக்கப்பட்டன. அவற்றுள் 25, 26, 29ஆம் சூத்திரங்கள் நானிலமக்களைப் பற்றியும், 27, 28, 30ஆம் சூத்திரங்கள் வேந்தனையும் வேந்தனொடு பொருந்திய ஏனோரையும் பற்றியும், 31, 32ஆம் சூத்திரங்கள் வேந்தர் குடியில் வாரா ஏந்தல்களான குறுநிலமன்னரைப் பற்றியும் கூறுகின்றன. இதனால் தொல்காப்பியர் காலத் தமிழகத்தில், அகத்திணையொழுக்கம் மேற்கொண்டவர் அடியோர் முதலிய கீழோரும், நானிலமக்களும், மூவேந்தரும், வேந்தரைச் சார்ந்து சிறந்த ஏனோரும், வேந்தர்குடிவாரா நாடாட்சிகொண்ட குறுநிலமன்னருமாய் அனைவருமடங்குவரென்பது தேற்றம். தமிழ்நாட்டில் முடிவேந்தர் மூவரே யாவரென்பது “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” என்னும் தொல்காப்பியர் செய்யுளியற் சூத்திரத்தானும், “போந்தை, வேம்பே, ஆரெனவரூஉ மாபெருந்தானையர் மலைந்தபூவும்” என்னும் புறத்திணையியற் சூத்திரத்தானும் பண்டைப் பாட்டுக்களானும் விளக்கமாகும். | சூத்திரம் : 33 | முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. |
கருத்து : இது, பெண்டிரொடு கடல்கடத்தல் தமிழ் மரபன்று என்று கூறுகின்றது. பொருள் : மகடூஉ வோடு முந்நீர் வழக்கம் இல்லை = பெண்ணோடு கடலேறிச் செல்லுதல் மரபன்று. |