| 80 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கூறும் பெற்றித்தாகலின், மகளிர்க்கு முந்நீர் வழக்கம் மறுக்கும் முன்னைச் சூத்திரத்தை யடுத்து மடன் மேவலை மறுக்கும் இச்சூத்திரம் அமைக்கப்பட்டது. பொருள்: எத்திணை மருங்கினும் = அகத்திணை ஏழனுள் எதன்கண்ணும்; மகடூஉ மடன்மேல் = தலைவி மடலேற விரும்புதல்; பொற்புடை நெறிமை யின்மையான = அழகிய முறைமை இல்லை. குறிப்பு: எத்திணை மருங்கினும் என்றார்; அன்பினைந்திணைப் பகுதியில் ஆடவர்போல் பெண்டிர் மடல் விரும்புதல் அமையாமை மட்டுமன்று; பெருந்திணையினும் ஏறிய மடற்றிறம் ஆடவர்க்கன்றி, புலனெறி வழக்கில் மகளிர்க்குக் கூறுவது வழக்காறில்லை என்பதை வற்புறுத்துதற்கு. மேவல்- மேல், இடைக்குறை; ஐந்தாம் பரிபாட்டிலும் மலைபடு கடாத்திலும் ஆரல்- ஆல் ஆனது போல. மேவல், விருப்பப் பொருட்டு. “நம்புமேவு நசையா கும்மே” (தொல். சொல், உரி. சூத். 33) “பேரிசை தவிர மேஎ யுறையும்” என்னும் மலைபடு கடாத்தடியுங் காண்க. ‘இல்லை’ என ஒரு சொல்லை வருவித்து, ‘ஆன’ என்பதைக் காரணக் குறியாக்கி, ‘பெண்பால் மடன்மேவலில்லை; பொலிவுபெறும் நெறிமை இல்லாமையால்’, என இளம்பூரணர் கொண்டாங்குக் கொள்ளலும் தள்ளும் தன்மைத்தன்று. எவ்வாற்றானும், மடலேறுதல் எனப் பொருள் கொள்ளுதல் பொருந்தாது. ஆடவர்க்குமே மடலேறுதல் பொற்புடை நெறிமைக்கு மாறாக ‘நோந்திறத்தி’ன் பாற்பட்ட காதலற்ற கழிகாமப் பழி பிறங்கும் இழிதகவுடைய பெருந்திணையின் பாற்படும் என்பது “ஏறிய மடற்றிறம். . . பெருந்திணைக் குறிப்பே” என்னும் சூத்திரத்தானும் வலியுறும். மடல் ஏறாமல், மடல் ஊர்வேன் எனக் கூறுதலும் ஆடவர்பால் பொற்புடை நெறியாக்காமல், ஒரோவிடத்துப் புலனெறி வழக்கில் அமைத்துக் கொள்ளப்படுகிறது. “மடன்மா கூறும் இடனுமா ருண்டே” எனுந் தொல்காப்பியச் சூத்திரத்தால், மடன்மா கூறுவதும் ஆடவரளவிலும் நன்மரபாகாமல், ஓராங்கு மரபு வழுவமைதியாக மட்டும் கொள்ளப்படும் தமிழ் வழக்குத் தெளிக்கப்பட்டது அதன் காரணமும் எளிதில் அறியப்படும். ஊரறிய “ஏறிய மடற்றிறம்” ஆடவருக்கும் பொருந்தாக்காமமாம் பெருந்திணை எனக் கடியப்படுகிறது. ஏறாமல் தனியிடத்தே மடலூர்வேன் எனமட்டும் கலைமகன் ஒரோவழிக் கூறுதல் அமைத்துக் கொள்ளப்பட்டது; |