பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை81

ஏனெனில் தலைவன் தன் காதற் பெருக்கை விளக்குமள விற்றாகி, தலைவியின், உறுதுணையாம் தோழிக்கு அவன் தனித்துத் தலைவியின் இன்றியமையாமையை வலியுறுத்தும் கருத்துடைமை காட்டும் கருவியாக்குதலால், மடன்மா கூறுதல் அகப்பகுதியில் ஆண் மகனுக்கு மரபு வழுவமைதியாக மட்டும் ஆளப்படும். இப்புலனெறி வழக்கு மறுத்தற்கில்லை என்பதைத் தொல்காப்பியர், “மடன்மா கூறு மிடனுமா ருண்டே” என்று கூறி, உம்மையாலும் ஏகாரத்தாலும் அதுவும் நன்மரபன்றென்பதை இனிது பெற விளக்கினார். ஆதலால் மடலேற அவாவுதல் ஒருவாறு ஆடவர்க்கு மரபு வழுவமைதியாக மட்டும் அமையுமெனக் காட்டும் ஆசிரியர், மகளிர்க்கு யாண்டும் பொற்புடை நெறியமையாகாது என்பதைச் சூத்திரத்தால் விலக்குவாரானார். இதுவே தமிழ் மரபென்பது:

“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
 பெண்ணிற் பெருந்தக்க தில்”

என்னும் குறளாலும்,

“அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
 மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
 தென்னுரையிற் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம்
 மன்னும் வடநெறியே வேண்டினோம்”

என்னும் திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமடலின் அடிகளாலும் தெளியப்படும். “மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கதில்”என்பதும் தலைவன் கூற்றேயாகலானும், மடல் ஊர்வேனென்று தலைவி கூறுதலாக யாண்டும் ஆன்றோர் செய்யுள் செய்யாமை யானும், மடல் ஏறும் விருப்பமும் மகளிர்க்குப் பொற்புடை நெறியாகாமை தேறப்படும், மேலும்,

“உடம்பும் உயிரும் வாடியக் காலும்
 . . . . . . . . . . . . . . . . . . . . .
 கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை”

என்னும் பொருளியற் (10) சூத்திரத்தால் மணந்து கணவனுடன் வாழும் மனைவியும் கணவனுக்குமே தன் காதலைக் கரத்தலே பெண்ணியல்பென வலியுறுத்துப்படுகின்றது. தனியிடத்துக் கொண்ட கணவனுக்கும் கரத்தற்குரிய தன் காதலை ஊரறிய