பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை83

கருத்து : இது, தலைவனுடன் போன தலைவியின் பிரிவாற்றாத தாயாரின் பரிவு நிலைமையும், அது பற்றிக் கூற்று நிகழும் பகுதிகளும் கூறுதல் நுதலிற்று.

பொருள் : போகிய திறத்து நற்றாய் புலம்பலும் = தலைமகள், தலைவனுடன் போனவழி, அவளைப் பெற்ற நற்றாயின் துனிதரும் தனிமையில் மகட் பிரிவின் அகப்பரிவாற் கூறுவனவும்; தன்னும் அவனும் அவளுஞ்சுட்டி = தன்னையும், தலைமகனையும் (அவனுடன் சென்ற) தன் மகளையும் குறித்து; மன்னு நிமித்தம் = அடிப்பட்ட புள் என்னும் நிமித்தங்களோடும்; மொழிப்பொருள் = விரிச்சி என்னும் நற்சொல்லோடும்; தெய்வம் = வேலன் வெறியாடல் முதலிய கடவுட் பராவலோடும்; நம்மை தீமை அச்சம் சார்தல் என்று = உடன் போக்கால் உளதாம் நன்மை தீமை அச்சம் சார்தல் என்பவற்றோடும்; அன்ன பிறவும் = அத்தகைய இடங்களுக்கேற்ற பிற கூற்றுக்களையும்; அவற்றொடு தொகைஇ = மேற்கூறிய வற்றோடு சேர்த்து; முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி = இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களோடும் இயைய விளக்கி; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் = தலைவியின் தோழியிடத்தும், தலைமக்களைக் கண்டுவருவோரிடத்தும்; ஆகிய கிளவியும் = நிகழும் கூற்றுக்களும்; அவ்வழி உரிய = அந்நிலையில் உரியனவாகும்.

குறிப்பு : போகிய திறத்து என்பதை முன்னே கூட்டிச் சூத்திரத் துறைகள் அனைத்திற்கும் பொதுவாக்கிப் பொருள் கொளலே பொருந்தும். ‘ஆகிய கிளவி’ என்பதனைத், “தன்னும் அவனும் அவளும் சுட்டி” என்பது முதல் ‘மூன்றுடன் விளக்கி’ என்பது வரை ஒவ்வொன்றனோடும், ‘தோழி தேஎத்தும், கண்டோர் பாங்கினும், புலம்பலும்’ என்பவற்றோடும் தனித்தனிக் கூட்டுக. ‘அவ்வழி’ என்பது அவ்வாறு உடன் போகிய மகட் பிரிவுக்கு வருந்தும் வழி என்றாகும். ‘புலம்பல்‘தோழி தேஎத்தும், கண்டோர் பாங்கினும், வருந்திக் கூறலைச் சுட்டலாகாப் பொருள் கோடல், ‘புலம்பே தனிமை’ (உரி. 33) என்னும் சூத்திரக் கருத்துக்கு மாறாகும். ஆதலால் நற்றாயின் தனிப்படர் இரக்கத்தையே அச்சொல் உணர்த்துமென்க. ‘நிமித்தம்’ என்பது காக்கை கரைதல், பல்லி ஒலி, ஓந்தி நிலை, இடத்தோள் இடக்கண் துடிப்பு முதலியவைகளைக் கொண்டு நன்மை தீமை துணிதல். இதற்குப் புள்ளறிதல் என்றே பெயர் வழங்கிற்று. முதலில் பறவைகளைக் கொண்டு குறிபார்க்கும் வழக்கத்தால் பறவையைக் குறிக்கும்.