பக்கம் எண் :

84நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

புள் என்னும் பெயர் நாளடைவில் எல்லாக் குறிகளையும் குறிக்கும் நிமித்தத்திற்கே வழங்கலாயிற்று. மொழிப் பொருள், என்பது நற்சொல்; ‘விரிச்சி, நற்சொல், மொழிப்பொருள்’ என்பன ஒரு பொருட் கிளவிகள். விரிச்சியை,

“வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
 ஈண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று”

என்பர் புறப்பொருள் வெண்பாமாலையார்.

(i)   தன்னும் அவனும் அவளும் சுட்டித் தாய் கூறும்கிளவிக்குச் செய்யுள்:

“இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி
 பைந்தா தெருவின் வைகுதுயின் மடியுஞ்
 செழுந்தண் மனையோ டெம்மிவ ணொழியச்
 செல்பெருங் காளை பொய்மருண்டு, சேய்நாட்டுச்
 சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
 வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
 வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த
 குவளை உண்கண்என் மகளோ ரன்ன
 செய்போழ் வெட்டிப் பெய்த லாய
 மாலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு
 மாயிருந் தாழி கவிப்பத்
 தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே”

(நற்றிணை. 271)

இச்செய்யுளின் ‘எம் இவண் ஒழிய’ எனவும், ‘எற்கொள்ளாக் கூற்றே’ எனவும் தாய் தன்னையே சுட்டியும், ‘செல்பெருங்காளை பொய் மருண்டு’ எனத் தலைவனைச் சுட்டியும், ‘வீசுனைச் சிறுநீர் குடியினன் கழிந்த குவளையுண்கண் என் மகள்’ என உடன் போன மகளைச் சுட்டியும் கூறுதல் காண்க.

“என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை
 நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
 அழுங்கல் மூதூர் அலரெழச்
 செழும்பல் குன்றம் இறந்தவென் மகளே”

(ஐங். 372)