பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை89

கருத்து : இது, தலைவி உடன்போனவழி அவள் தாய்மார் அவளைத் தேடிச் செல்லுதலும் உண்டென உரைக்கின்றது.

பொருள் : ஏமப் பேரூர்ச் சேரியும் = தீதுறாக்காவலுடைய பேரூரைச் சார்ந்த சேரியிலும்; சுரத்தும் = தலைவி உடன்போகிய அருவழியிலும்; தாமே செல்லும் தாயருமுளரே = தன்னையர் தமர் முதலியோர் துணையின்றிச் சென்ற மகளைத் தேடித் தாமே செல்லும் தாய்மாரும் உளராவர்.

குறிப்பு : ஏமமற்ற ஊராயின் தாயர்மனையிறந்து புறஞ்செல்லாராதலின் ‘ஏமப் பேரூர்ச்சேரி’ எனப்பட்டது, ஏமப் பேரூர்ச் சேரியாயின், அதனளவு மகட்பெற்ற நற்றாய் தேடிச் செல்லுதல் அமையும்; நற்றாய் சுரஞ்சென்று தேடுதல் வழக்காறில்லை. செவிலித் தாயர் சுரத்தும் தேடிச் செல்வர். இதுவே பண்டைய ஆன்றோர் செய்யுளிற்கண்ட புலனெறி வழக்கம். சிற்றூராயின் தேடிச்செல்லுதல் வேண்டாவாதலின் சேரியுடைய பேரூரே கூறப்பட்டது. ‘தாயரும்’ எனும் உம்மையால், தாமே செல்லும் தாயர் சிலரேயாவரென்பதும், தேடப் பிற அயலோரை ஏவும் தாய்மாரே பலராவரென்பதும் பெறப்படும். அடுத்துப் பின் கூறும் “அயலாரோடு” சுரம் செல்லும் தாயருமுளரெனச் சுட்டுவதால் இவ்வும்மை எதிரது தழூஉடம் எச்சமுமாம்.

இனி, சேரியும் சுரத்தும் என ஒருங்கெண்ணிச் ‘செல்லுந் தாயரும் உளர்’ எனப் பன்மையாற் கூறுதலால், நற்றாய்மனையிருந்து இரங்குவதன்றி மனையிறந்து புறம்பெயர்தல் இன்றெனக் கொண்டு, செவிலித்தாயரே சேரியும் சுரத்தும் செல்வர் எனப் பொருள் கொள்ளினும் தவறாகாது, நற்றாய் பேரூர்ச்சேரி அளவு தேடிச் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு: “ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி” (275) என்னும் அகப்பாட்டில் “வெம்மலை அருஞ்சுரம். . . . . . கண்ணுடையீரே” என வருமடிகள் ஏமப்பேரூர்ச் சேரியில் தேடிச்சென்ற நற்றாய் கூற்றாகும். “கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ” என்பதனால் அப்பேரூர் காவல் மதிலுடைய தென்பதும், அந்நகர் மதிற்புறத்தே தன்மகள் விரல்கொண்டு வரித்த வண்டல் காணக்கிடப்பதாய்க் குறித்ததனால் அது நகர்ப் புறச்சேரி என்பதும் விளக்கமாகும். அன்றியும், ‘நம்மிவணொழிய’ என