| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 91 |
இதற்குப் பழைய உரைகாரர் வேறுபொருள் கூறுவர். அது வருமாறு : அயலோராயினும் = முற்கூறிய சேரியினும் சுரத்தினுமன்றித் தம்மனைக்கயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்றே = அதுவும் பிரிவின்கண்ணதாம் என இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் உரை கூறுவர். மேற்சூத்திரம் கூறும் சேரியுஞ் சுரமும் காதலர் பிரியுமிடம் குறியாது, உடன்போன தலைமக்களைத் தாய்மார் தேடிச்செல்லும் இடத்தையே குறிக்குமாதலால், அங்குப் பிரியாமல் தம்மனை அயலேபிரிதலை இச்சூத்திரம் கூறுவதாகக் கொள்ளும் அவ்விருவர் உரையும் பொருந்தாது. அன்றியும் மேற்சூத்திரம் பாலையாம் பிரிவைக் குறிப்பதேயன்று; பிரியாமல் உடன்போன தலைமகளை அவள்தாயர் தேடிச் செல்லுதலை மட்டுமே குறிக்கும். பிரிவையே கருதாத இச்சூத்திரம் பிரியுமிடத்தணிமை குறிக்கும் எனல் எவ்வாற்றானும் அமைவதன்றாம். அதனாலும் அவர்தம் உரை தொல்காப்பியர் கருத்தன்மை அறிக. இனி, இதற்கு இன்னும் ஒருபொருள் கூறுவாருமுளர். அதுவருமாறு: அயலோராயினும் = உடன்போய தலைமக்கள் சுரம் போகாமல் ஊரகத்தே மனை அயலில் தங்குவாராயினும்; அகற்சிமேற்று = அதுவும் பிரிவின்கண்ணதேயாம். இவ்வுரையும் இச்சூத்திரத்திற்குப் பொருந்தாது. மனையயல் உறைதல் உடன்போதலாமாறில்லை. உடன்போய தலைமக்கள் மனையயல் உறைந்ததாகப் புலனெறி வழக்கில் யாண்டும் ஆன்றோர் செய்யுளிலாட்சியுமில்லை; ‘தாமே செல்லும் தாயரும்’ என்னும் முன் சூத்திரத் தொடரொடு அடுத்தியையும் அயலோராயின் எனும் சொற்றொடர் அவ்வாறு செல்லுந் தாயரல்லாப் பிறரையே சுட்டுவது வெளிப்படை. மேலும், ‘அகற்சி’ என்பது நெடுந்தூரத்தையே குறிக்குமாதலின், மனை அயலைக்குறியாது. ‘அகற்சி’யை நீங்குதல் எனப்பொருள் கொண்டு, பிரிவெனும் பாலைத்திணையை இச்சூத்திரம் கூறுவதாக உரையாசிரியர் கொண்டனர்; முன், அவர் கொண்டுதலைக் கழிதலைப் பாலைத்திணையாகக் கொண்டதுபற்றி இச்சூத்திரத்திற்கும் இவ்வாறு உரை கூறுவாராயினர். உடன்போகும் தலைமக்கள் தம்முட் பிரிதலின்மையின், அவரொழுக்கம் பாலையாதலில்லை. அதனால் ஈண்டு ‘அகற்சி’ என்பது பிரிதலை உணர்த்தாது சேய்மையையே உணர்த்துமென்க. |